இந்திய ஒன்றியத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குதான் அறிவு அதிகம் என்றும், மற்றவர்களுக்கு அது குறைவென்றும் ஒரு கருத்து திணிக்கப்பட்டுள்ளது. இதைபோன்றே, வளர்ந்த நாடுகளிலும் வெள்ளை இனத்தவருக்கே அறிவு அதிகமென்றும், கறுப்பினத்தவருக்கு அது குறைவென்றும் கருதப்படுகிறது. அது, அங்குப் பொதுப்புத்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் கறுப்பர்களின் அடிமை நிலையை ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் மற்றும் தாராளச் சிந்தனையாளரான எச்.ஜி.வெல்ஸ் போன்ற ஆளுமைகளுக்குமே அத்தகைய சிந்தனை இருந்தது. ‘கறுப்பின மக்கள் சமஉரிமைக்கு உரியவர்கள் என்றாலும், அறிவிலும் ஆற்றலிலும் வெள்ளை இனத்தவருக்கு அவர்கள் இணையானவர்கள் அல்லர் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்’ என்று அவர்களைப் பற்றி எழுதுகிறார் ரிச்சர்ட் டாகின்ஸ். .

இக்கருத்தை வலுப்படுத்தும் விதமாகவே, ஒரு குழந்தையின் அறிவுத்திறனை சோதிக்கும் IQ (Intelligencel Quotient) எனப்படும் நுண்ணறிவுத் திறன் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரேநாட்டில் வாழ்ந்தாலும் வெள்ளை இனத்தவரைவிட, கறுப்பினத்தவருக்கு நுண்ணறிவுக் குறைவு என்று காட்டுவதற்காக அந்நாட்டு உளவியலாளர்கள் பல்லாண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார் ஜேரட் டயமண்ட்.

அடிப்படையில் இவ்விரு இன மக்களுமே தம் சமூகச் சூழலிலும் கல்வி வாய்ப்பிலும் பெருத்த வேறுபாடுடையவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஒருவரின் நுண்ணறிவைத் தீர்மானிப்பதில் மரபும், சூழலும் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. இச்சோதனைகள் பெரும்பாலும் மரபுத் திறன் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. குறிப்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசியரான ஸ்டீபன் ஜெய்கௌல்ட், அறிவியல் ரீதியான இன வேற்றுமைக்கான அடித்தளமாகப் பயன்படுத்தப்பட்ட அவற்றின் வரலாற்றைச் சுட்டிக் காண்பிக்கிறார். .

ஒருவரின் அறிதல் திறனில் அவரின் குழந்தைப் பருவத்துச் சமூகச் சூழல் வெகுவாகச் செல்வாக்குச் செலுத்துகிறது. மூளையில் செயல்பாட்டுக்குத் தேவையான ஆற்றலைப் பெற ஊட்டச்சத்துமிக்க உணவு அவசியம். ஊட்டச்சத்துப் பற்றாகுறை அல்லது தவறான ஊட்டச்சத்து ஒரு குழந்தையின் IQ அளவை குறைத்துவிடும் என்கிற கருதுகோள் நிலவும்போது வசதிமிக்கக் குடும்பத்துக் குழந்தையோடு ஒரு ஏழைக் குடும்பத்துக் குழந்தையை ஒப்பிட முடியாது என்பதே அறம்.

இதுதவிர, IQ சோதனைகள் ஒரு குழந்தையிடம் இயற்கையில் அமைந்துள்ள தூய திறமையை அளவிட முற்படுவதில்லை. மாறாக, அவை குழந்தையின் பண்பாட்டுக் கற்றலை அளவிடவே முற்படுகிறது என்கிறார் ஜேரட் டயமண்ட். பண்பாட்டுக் கற்றல் ஒருவரின் ‘பண்பாட்டு முதலீடு’ எவ்வளவு என்பதை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. இந்திய ஒன்றியத்தில் பல நூற்றாண்டு காலமாகக் கல்வியை அனைவருக்கும் வழங்காது தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பார்ப்பனச் சமூகத்துக்கு மட்டுமே அத்தகைய ‘பண்பாட்டு முதலீடு’ இங்குப் பேரளவில் இருந்தது. இதர வகுப்பினரிடம் அது வறிய நிலையில் இருந்தது. அதன் காரணமாகவே, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பார்ப்பனச் சமூகத்தால் முந்திக்கொள்ள முடிந்தது. இதனை மறைத்துவிட்டே, ‘பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி’ என்று மதுவந்திகள் உளறுகின்றனர்.

ஆனால், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாட்டிலேயே கருப்பின மக்களின் நுண்ணறிவில் குறைபாடு உள்ளது என்பதை நிறுவும் முயற்சியில் இன்றுவரை வெற்றி கிடைக்கவில்லை என்கிறார் ஜேரட் டயமண்ட். தமிழ்நாட்டிலும் அதே கதைதான் என்று கூறலாம். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டு உயர்கல்வி குறித்த விரிவான கணக்கெடுப்பு அறிக்கை (AISHE) அதைக் காட்டுகிறது. அதிலிருந்து, தமிழ்நாடு குறித்து நம் கவனத்தைக் கவரும் சில செய்திகள் இவை:

இந்திய ஒன்றியத்திலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட முதல் மாநிலம்.

இந்திய ஒன்றியத்திலேயே அதிகப் பாரா மெடிக்கல் கல்லூரிகளைக் கொண்ட முதல் மாநிலம்.

இந்திய ஒன்றியத்திலேயே அதிகப் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளைக் கொண்ட முதல் மாநிலம்

இந்திய ஒன்றியத்திலேயே அதிக உயர் கல்வி ஆசிரியர்களைக் கொண்ட முதல் மாநிலம்

இந்திய ஒன்றியத்திலேயே அதிக ஓபிசி. பிரிவு ஆசிரியர்களைக் கொண்ட முதல் மாநிலம்

இந்திய ஒன்றியத்திலேயே அதிக நர்சிங்க கல்லூரிகள் கொண்ட இரண்டாவது மாநிலம்

இந்திய ஒன்றியத்திலேயே அதிக எஸ்.சி, எஸ்.டி பிரிவு ஆசிரியர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலம்.

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் படித்துப் பயனடைகின்றனர். தமிழ்நாடு, ஆசிரியர்–மாணவர் விகிதத்தில் 18 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் முன்னணியில் உள்ளது. இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டின் இந்த முன்னேற்றத்துக்கு எது அடிப்படை? ஒரே பதில்தான் – சமூகநீதி.

இட ஒதுக்கீடே இல்லாத பன்னாட்டு நிறுவனங்களிலும் தம் திறமையால் வேலை வாய்ப்புகளைக் கைப்பற்றும் அளவுக்கு இன்று தமிழர்கள் வளர்ந்துள்ளனர். அவர்களுடைய IQ வளராமல் இது சாத்தியமா? அதிக ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவு ஆசிரியர்களைக் கொண்ட தமிழகக் கல்வி நிலையங்களில் படித்துத்தான் இது சத்தியமாகி உள்ளது என்பதையும் யோசிக்க வேண்டும்.

சமூகநீதியால் கிடைத்த வெறும் அரை நூற்றாண்டு, ‘பண்பாட்டு முதலீட்டுக்கு’ இவ்வளவு வெற்றி என்றால், ஈராயிரம் ஆண்டுகளாக அந்தப் பண்பாட்டு முதலீடு எமக்குக் கிடைத்திருந்தால்…? எனவே, முதலில் உங்கள் IQ கதையையும், ‘மூளை வலிமை ஜாஸ்தி’ என்ற உளறலையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.