நம்மைச் சுற்றிலும் அனைத்து விதமான சுற்றுச்சூழல் கேடுகளும் நிகழும் காலம் இது. ஆனால் அந்தக் கேடுகளின் எண்ணிக்கை அளவுக்குக்கூட புனைவிலக்கியங்களில் அவை பதிவாவதில்லை. சில விதிவிலக்குகள் உண்டு எனினும் இன்னும் போதாமையே நிலவுகிறது. இந்நிலையில் சூழல் கேடுகளில் ஒன்றான மணற்கொள்ளை குறித்து பா. செயப்பிரகாசம் எழுதியுள்ள ‘மணல்’ எனும் புதினம் வந்துள்ளது. நாம் காவிரி, தாமிரபரணி போன்ற பெரிய ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளை பற்றி பேசுவதே வழக்கம். ஆனால் இவர் விளாத்திக்குளம் பகுதியில் ஓடும் வைப்பாறு என்னும் ஒரு காட்டாற்றை தன் கதைக்களனாகத் தேர்வு செய்துள்ளார்.

காட்டாறு ஓடும் பகுதி என்றாலே அது வறட்சியான பகுதி என்பதே பொது எண்ணம். கதை நிகழும் வைப்பாறு ஆற்றுப்படுகையின் பத்து கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் அது காய்கறி சாகுபடிப் பகுதியாக உள்ளது. அதற்கு காரணம் நிலத்தடி நீர்வளம். நீர்வளத்துக்கு காரணம் மணல் நிறைந்த வைப்பாறு. அந்த வைப்பாற்று பகுதியின் நிலக்காட்சி வட்டார மொழி அழகோடு கதையில் விரிகிறது. பனைகளை நம்பி வாழும் விடலி வாழ்க்கையும், ஆழ்துளைக் கிணற்றிலிருந்து நீரெடுத்து கரிமூட்டம் தயாரிக்கும் மக்களும் என விரியும் காட்சியில் தை மாதத்துக்குப் பிறகு வீசும் கச்சாங்காற்றும், ஆவாரமும் கரட்டாங்கோரை,முளைத்த நிலங்களோடு மொங்கான் காடை, கவுதாரி, மாம்பழச்சிட்டுகளும் வாழ்கின்றன.  

வைப்பாறு என்பது தனி ஆறல்ல. அது ஏழெட்டு மகரந்த ஓடைகளின் கலப்பு. அதில் நீரோடும் காலங்களில் மணலை, உளுவை, கெளுத்தி போன்ற ‘ஆத்துமீன்’கள் உண்டு. கெளுத்தி கெட்டுக்கிடையாய் நீருக்கடியில் கிடக்காது. மேலே வந்து மூச்சுவிடும்போது வலைப்போட்டு லாவி பிடிக்கலாம். முழங்கால் தண்ணீர் கிடக்கும் கரையோரம் உளுவை மீன்கள் நீலத்தை தண்ணியிலே கரைச்சிவிட்ட மாதிரி ஒரே படையாய் வரும். மணலுக்குள் தலையை செருக்கிகொண்டு உடலை மட்டும் வெளித்தெரியக் காட்டும். ,

ஆற்றில் மேல் மணலாகக் கிடப்பது நொய்மணல். இதை மாடுபிடியின்போது வீரர்களுக்கு விழுந்தால் அடிப்படக்கூடாது என்பதற்காக தூவி வைப்பர். கேரள மணல் சந்தைகளில் ‘இங்கு வைப்பாறு, தாமிரபரணி நொய்மணல்’ கிடைக்கும் என்கிற அளவுக்கு புகழ்பெற்றிருந்தது. மணல் அடுக்குக்கு கீழே சுக்காம்பாறை இறுதியில் காக்காய்பொன் பாளங்கள் நிறைந்த ஆற்றுப்பகுதியில் மூன்றடிக்கு மண்ணள்ள அனுமதி வாங்கி 20-40 அடிவரை தோண்டப்படுகிறது. வைப்பாற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்ட 36 ஆழ்துளைக் கிணறுகள் உண்டு. அதைச் சுற்றி 500 மீட்டர் தொலைவுக்கு மணல் அள்ளக்கூடாது என்பது விதி. ஆனால் அம்மணலின் மதிப்பு 3 கோடி ரூபாய் எனும்போது விதிகள் என்ன செய்யும்?

வைப்பாற்றில் முதன்முதலில் மணல் திருடப்படும்போது. மக்கள் வட்டச் செயலரின் மகனைக் கட்டி வைத்து அடிக்கிறார்கள். அவர் மன்னிப்புக் கேட்டு மீட்கப்படுகிறார். பின்பு சட்டங்கள் மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாகத் திருத்தப்பட்டு வைப்பாற்றில் மணல் எடுப்பது சட்டபூர்வமாகிறது. இப்போது அச்சட்டத்தின் விதிமீறல்களைச் சுட்டிக்காட்டித்தான் பேச முடிகிறது. அவ்வப்போது மணல் லாரிகள் மறிக்கப்பட்டும் பயனில்லை. மக்களுக்கு குடும்ப அட்டைக்கு நாளொன்றுக்கு நாற்பது வீதம் சிலநாட்கள் நியாயவிலைக் கடை மூலமாகவே பண விநியோகம் நடக்கிறது. எதிர்ப்புணர்ச்சி அடங்கியதும் அது சில நாட்களில் நிறுத்தப்படுகிறது.

போராட்டக் களத்தில் அழகிரி, மாறன், மாடசாமி, சமரன் முதலியோர் உள்ளனர். அழகிரியை கொல்ல கூலிப்படை நியமிக்கப்பட்டு அவர் தப்பித்து விடுகிறார். மாறன் – பாண்டியம்மாள் காதல் ஒருபக்கம் தொடர்கிறது என்றால் மற்றொரு பக்கம் செல்லத்தாயி – வேலுராசு காதல். அவள் குவாரிக்காரர்களுக்கு ஒத்துழைத்து புதிய பணக்காரராக மாறிய தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த நீலமேகத்தின் ஒரே மகள்.

மணல் கொள்ளை உச்சத்துக்குப் போகும்போது இயந்திரங்கள் மாற்றும் லாரிகளுடன் ஊர்மக்கள் சிறைப்பிடிக்கின்றனர். கையூட்டு முயற்சிகள் பலனளிக்கவில்லை. விசாரணை ஒருபக்கம் நடக்கிறது. குவாரி தரப்பினர் குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் தர முடிவு செய்கின்றனர். வாக்குக்கு 1000 வாங்கினாலே ஐந்து ஆண்டுகளுக்கு மவுனமாகிவிடும் மக்கள் 5000 வாங்கினால் என்ன செய்வார்கள் என்று போராட்டக்காரர்கள் கவலைக் கொள்கிறார்கள். இதற்கிடையில் புதுப் பணக்கார் நீலமேகத்தின் மகளான செல்லத்தாயி குவாரி பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து இறக்கிறாள். போராட்டக்காரனான மாறன் ஒரு லாரி மோதி கொல்லப்படுகிறான். சில மாதங்களுக்கு பிறகு ஊர்மக்கள் தண்ணீர்க் குடுவையோடு தீப்பெட்டிக் கம்பெனிகளுக்கு வேலைக்குப் போகிறார்கள் என்கிற கள யதார்த்தத்தோடு முடிகிறது கதை.  

அழுத்தமாய் வந்திருக்க வேண்டிய கதை எங்கோ பிசகுத் தட்டியுள்ளது. பா.செயப்பிரகாசத்தின் அல்புனைவு எழுத்துகளில் உள்ள ஈர்ப்புத்தன்மை இந்தப் புதினத்தில் விடுப்பட்டுள்ளது. தற்காலத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிவிட்ட எழுத்து நடை. மனதில் அழுத்தமாக பதியவேண்டிய சிறந்த கதை மாந்தர்கள் மேம்போக்காகவே கடந்து விடுகின்றனர். தேவையற்ற இடங்களிலும் ஆசிரியரின் குரல் இடைபுகுந்து ஒலிப்பது வாசிப்பு ஓட்டத்துக்கு பெருந்தடை. 37 ஆம் பக்கம் என்கிற ஒரே பக்கத்திலேயே தோழர் சேதுராகவனாக அறிமுகமாகுபவர் சட்டென்று விசயராகவனாகிப் பிறகு மீண்டும் சேதுராகவனாகிய அடுத்தப் பத்தியிலேயே வீரராகவனாகி இறுதியில் சேதுராகவனாக நிலைப்பெறுகிறார். இவ்வளவு ‘எடிட்டிங்’ குழப்பம் ஏன்? ஆனாலும் சுற்றுச்சூழலின் முதன்மை சிக்கல்களுள் ஒன்றை பேசிய வகையில் இந்நூல் எதிர்கால ஆவணங்களுள் ஒன்றாக இடம் பெறும். .  

மணல் (புதினம்), பா.செயப்பிரகாசம்,, நூல் வனம், விலை: 210, பேசி: 91765 49991