மாலத்தீவின் ரா அடோல் பகுதியிலுள்ள ‘மடுவ்வரி’ தீவில் வசித்து வந்த நேரம். ஜூன் மாத இரவொன்றில் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தோம். திடீரெனக் கால்களைக் கடல்நீர் வந்து நனைக்கத் திடுக்கிட்டேன். கடற்கரைக்கு வெகு அருகில்தான் வீடு என்றாலும் முதலில் கடற்கரை, அடுத்து இன்னொரு வீடு தாண்டி நாங்கள் வசித்த பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்திருந்தது. ஆனால் அங்கிருந்த தீவு மக்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இந்தப் பருவத்தில் இப்படிதான் வரும் என்று கூறி இயல்பாக இருந்தனர்.

ஆனால் இதே மக்கள் ஒரு பகல் நேரத்தில் கடல்நீர் நிலத்துக்குள் நுழைந்ததும் திகிலானார்கள். இரவில் கடல்நீர் வெகு தொலைவு வந்தபோதும் அஞ்சாதவர்கள், பகலில் சிறிதுத் தொலைவு வந்த கடல்நீருக்காக அஞ்சுவதற்குக் காரணம் கேட்டேன். ‘இது வழக்கத்துக்கு மாறானது. இதுவரை இதுபோல் நடந்ததில்லை’ என்றனர். சமவெளி மனிதனான எனக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒன்று போலவே தெரிந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே தீவு மக்கள் அஞ்சியது நியாயமே என்பதை 2004ன் அந்த ஆழிப்பேரலை மெய்ப்பித்தது.

ஆழிப்பேரலையின் போது தொலைத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. நாங்கள் வசித்த தீவுக்கு வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வானொலியில் தலைநகர நிலைப் பற்றி மட்டுமே பேசினர். இதரப் பகுதிகளின் செய்திகள் கிடைக்க அவர்களுக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. இந்நிலையில் எங்கள் தீவின் தலைவருக்கு அந்த யோசனைப் பிறந்தது. முன்னொரு காலத்தில் பயன்படுத்திய ‘ரேடியோ போன்’ தூசித்தட்டி எடுக்கப்பட்டது. ’ரோஜர், ரோஜர்’ என்று தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட எல்லாத் தீவுகளிலும் இதே யோசனைப் பிறந்துச் செயற்பட்டுள்ளனர் என்பதைப் பின்னர் அறிந்தோம். இதன் பிறகே அனைத்துத் தீவுகளின் நிலைமையும் தலைநகருக்குத் தெரிய வந்தது.

அலைப்பேசித் தோற்ற இடத்தில் ரேடியோ போன் கொண்டு மீட்டச் செயல் ஒருவகையான ‘புவியியல் வரலாற்று அறிவின் மீட்பு’ எனலாம். ரேடியோ போன் காலம் என்பது அப்படியொன்றும் மூத்த காலம் அல்லதான்; எனினும் அந்த மூத்த அறிவின் உதவிதான், ‘உடுக்கை இழந்தக் கைக்கு இடுக்கண் களைந்தது’. ஆழிப்பேரலை, ஒக்கிப்புயல், கேரளப் பெருவெள்ளம் இவற்றுடன் கஜாப் புயலையும் ஒப்பிட்டு இதுபோன்ற பிரதேசப் புவியியல் வரலாறுச் சார்ந்த அறிவுப் பெட்டகத்தின் அவசியத்தைத் திறந்து காட்டுகிறது வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள் எழுதியுள்ள ‘கஜாப் புயலும் காவிரி டெல்டாவும்’ எனும் இந்நூல்.

என்னைப் போன்ற எழுத்தாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு வறீதய்யாவின் எழுத்துக்கள்தான் கடல் அகராதி. கடல் என்றால் வறீதையா; வறீதையா என்றால் கடல். இவர் கடலைத் தவிர வேறு எதையும் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. அந்தளவுக்குக் கடலையே மூச்சாகக் கொண்டு வாழ்பவர்; அதைப் பற்றியே சிந்திப்பவர். இம்முறை கஜாப் புயல் பாதிப்பில் கடற்கரை நிலத்தோடு மருதநிலத்தையும் பேசுகிறார். இதன்வழி அவர் சொல்லும் செய்தி இதுதான்: ‘திணைகள் என்றுமே தனித்தியங்க முடியாது’.

பேரிடர் மேலாண்மையில் மரபுசார் அறிவின் பங்களிப்பினை இந்நூல் வலிறுத்துகிறது. இதற்காக நவீன அறிவியல் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதல்ல. பிந்தையது மக்களின் அவசியத் தேவைக்கு உதவாத வகையில், அதிகாரத்தின் கைகளில் அலங்காரக் கருவியாய் வீற்றிருக்கையில் வேறு வழியில்லை. கஜா புயலில் இலட்சக்கணக்கில் தென்னை மரங்கள் வீழ்ந்தது பற்றி அறிவோம். அதேநேரம் ஒருவர் மட்டும் புயல் எச்சரிக்கைக் கிடைத்தவுடன் தோப்புக்கு நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்தி, மரங்களில் குருத்தோலையை மட்டும் வைத்துவிட்டு மற்ற ஓலைகளையும் குலைகளையும் வெட்டி விட்டுள்ளார். எனவே இவரது தோப்பில் மட்டும் ஒரு மரம் கூட வீழவில்லை. இவருக்குத் தெரிந்துள்ள நுட்பம் அரசுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்திருந்தால் அனைவருக்கும் உதவியிருக்கலாம் அல்லவா?

ஆழிப்பேரலைக்கு உதவ வந்த தொண்டு நிறுவனங்கள் எதையும் கஜாப் புயலில் காணவில்லை. இதை, ‘தொண்டு நிறுவனங்களின் மௌனம், பன்னாட்டு நிதியங்களின் மௌனம்’ என்கிறார் வறீதையா. எல்லாவற்றுக்கும் பின்னாலும் ஒரு கணக்கு இருக்கிறது. படேல் சிலை வைக்க 2225 கோடி ரூபாய்க்கொடுத்து உதவிய இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஓஎன்ஜிசி உள்ளிட்ட ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றுக்கூடக் கடந்த ஒக்கி, கேரளப் பெருவெள்ளத்துக்கு உதவவில்லை என்பதை நினைவுக் கூறுகிறார். தானே, வர்தா, ஒக்கி, கஜாப் பேரழிவின் போது தமிழக அரசுக் கேட்ட மொத்த நிவாரணத் தொகையில் நடுவண் அரசு வழங்கியது வெறும் 5% மட்டுமே என்பது வேறொரு வகை அரசியல்.

கஜாப் புயலில் அரசின் கண்டு கொள்ளாமைக்குப் பெட்ரோலிய மண்டலக் கொள்கை ஒரு காரணமாக இருக்கலாம் என்னும் எண்ணம் டெல்டா மக்களிடையே நிலவுகிறது. எனினும் பெரு நிறுவனங்களுக்கு எதிரான தமது எண்ணம் என்னவென்பதை இவ்வளவு துயரத்திலும் அதிராம்பட்டினம் மக்கள் செயலில் காட்டியுள்ளனர். அவர்கள் ஸ்டெர்லைட் அனுப்பியப் பொருள்களை ஏற்காதுத் திருப்பி அனுப்பியுள்ளனர். தூத்துக்குடி ஆனாலும் டெல்டா ஆனாலும் மக்களின் எண்ண ஓட்டம் ஒன்றே.

இந்நூலில் கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்களை முதலில் பேசவிட்டு, அதன் பின்னணி அரசியலைத் தன் நுண்ணறிவு கொண்டு அலசும் அணுகுமுறையைக் கையாண்டுள்ளார் ஆசிரியர். ஆங்காங்கே அவரின் கடல்சார் அறிவும் தெறிக்கிறது. எல்லா மீன்களும் ஒரே காலத்தில் இனப்பெருக்கம் செய்வதில்லை என்பது அறிவியல். ஆனால் உலகிலேயே இந்திய ஒன்றியத்தில் மட்டும்தான் ‘மீன்பிடித் தடைக்காலம்’ நடைமுறையில் உள்ளது. இதைக் காட்டிலும் வேடிக்கை. தடைச் செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டைத் தடுக்காத அரசுதான் மீன்பிடித் தடைக்காலத்தைச் செயற்படுத்துகிறது. நமக்கு இறால் உற்பத்தியும் வேண்டும்; ஆறுகள் இணைப்புத் திட்டமும் வேண்டும். ஆனால் டெல்டா நீர்க் கடலுக்குக் கிடைத்து வந்த காலத்தில்தான் நிறைய இறால்கள் கிடைத்தன என்கிற மீனவர்களின் குரல் மட்டும் கேட்காது.

பேரிடர்கள் இனிமேலும் தொடர்ந்து வரத்தான் போகிறது. ஆனால் பேரிடர் மேலாண்மை அன்றும் இன்றும் என்றும் கேள்விக் குறியாகவே உள்ளது. செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதை நூல் ஆசிரியர் புரிய வைக்கிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள பொருட்பொதிந்த ஒரு சொற்றொடர்: ‘மீன்களுக்குப் பாஸ்போட் இல்லை’. மீன்கள் தம் கடலுக்குள் எங்கு வேண்டுமானாலும் இடம் பெயரக்கூடும். ஆனால் மக்கள்? இதற்கான தீர்வைப் பேசும் இந்நூலை வரவேற்போம்.