மலேசிய எழுத்தாளர் யோகி சந்துரு, தான் அடுத்து எழுதியுள்ள நூலின் தலைப்பை அண்மையில் அறிவித்திருந்தார். நூலில் தலைப்பே ஈர்க்கும் விதத்தில் இருந்தது – ‘கோறனி நச்சில்’. அவரிடம் விசாரித்தபோது அது ‘கொரோனா கிருமி’யின் தமிழ் மொழிப்பெயர்ப்பு என்றார். தமிழ்மொழியின் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் மலேசிய தமிழர்களின் பங்கு எப்போதுமே சிறப்பு வாய்ந்தது.

கலைச் சொற்கள்

மலேசிய, சிங்கப்பூர்த் தொலைக்காட்சிகளில் தமிழ்ச் செய்திகளைக் கேட்டிருக்கும் நேயர்களுக்கு அதன் சிறப்புகள் தெரியும். அந்தளவுக்குச் சொக்க வைக்கும் அழகுத் தமிழைப் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, “கடப்பிதழ் தொடர்பான குற்றம் காரணமாக ஒருவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது” என்று அங்கு வாசிக்கும் செய்தியை தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் இப்படி வாசிக்கும்: “பாஸ்போர்ட் தொடர்பான குற்றம் காரணமாக ஒருவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.”

தொலைக்காட்சி, வானொலி அனைத்திலும் அங்கு அழகுத் தமிழ்தான். அங்கிருந்தபோது, ‘வானொலி, தொலைக்காட்சி’ போன்ற சொற்களும் மலேசிய தமிழர்களின் பங்குதான் என்றும் கேள்விப்பட்டேன். அதைப்பற்றித் தெளிவாகத் தெரியவில்லை எனினும், அங்கு வசித்தபோதுதான் இண்டர்நெட் உலகுக்கு அறிமுகம் ஆனது. தமிழ்நாடு அந்த ஆங்கிலச் சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள மலேசிய தமிழர்கள் உடனே அதை ‘இணையம்’ ஆக்கி வெற்றிகண்டனர். கம்யூட்டரைத் தமிழ்நாடு ‘கணிப்பொறி’ என்று அழைத்துக் கொண்டிருந்த காலத்தில் அதை எப்போதோ ‘கணினி’ ஆக்கி உலவவிட்டது மலேசியாதான். இன்றைய ‘புலனம்’ என்கிற சொல்லும்கூட மலேசியாவின் அன்பளிப்புதான்.

தமிழின் பசுமை எழுத்தாளர்கள் சூழலியல் தொடர்பான கலைச்சொற்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் என்னுடைய பங்கும் மிகச் சிறிதளவு உண்டு என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எந்தவொரு கலைச்சொல்லும் தன் புலமையைக் காட்டுமாறு இல்லாமல் எளிய மக்களிடமும் புழங்கும் வகையில் அமையவேண்டும். இல்லையென்றால் தோல்விதான். இதற்கு நிறையச் சான்றுகளைத் தரமுடியும். இதனால்தான் ஆங்கிலச் சொற்கள் அப்படியே தமிழில் நுழைந்து தமிழில் நிலைத்துவிடுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கிக்கொண்டிருந்த சில ஆங்கிலச் சொற்களைத் தமிழில் இருந்து அகற்றிய பெருமை மலேசிய தமிழர்கள் உருவாக்கிக் கொடுத்த சில கலைச்சொற்களுக்கு உண்டு.

தமிழ்நாட்டு இறக்குமதி

ஆனால் அதையும் கெடுத்து வருகிறது தற்போது தமிழ்நாட்டு ஊடகங்களில் இருந்து மலேசியாவுக்கு இறக்குமதியாகும் தமிழ் க(கொ)லைச் சொற்கள் என்று வருத்தப்படுகிறார் இரா. திருமாவளவன். எடுத்துக்காட்டாக Social Distance என்கிற ஆங்கிலச் சொல்லைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் ‘சமூக இடைவெளி’ என்று மொழிப்பெயர்த்து வழங்கின. சமூக இடைவெளி என்றால் ஒரு சமூகத்துக்கும் மற்றொரு சமூகத்துக்கும் இடையேயுள்ள பொருளாதார, கல்விநிலை போன்ற ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கும் இதைச் சமூகத்தில் வலிய உருவாக்குவதுதான் சமூக இடைவெளியா? உண்மையில் நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு இடைவெளி விடுவதை ‘கூடல் இடைவெளி’ என்றே அழைக்க வேண்டும் என்கிறார் அவர். ஆனால், தற்போது மலேசிய ஊடகங்களும் தமிழ்நாட்டு ஊடகங்களைப் பின்பற்றி இச்சொல்லைப் பயன்படுத்துகிறதாம். மலேசியாவாவது கெட்டுப் போகாமல் இருக்கட்டும்.

வரவேற்போம்

இந்நிலையில்தான் யோகி அவர்கள் தன்னுடைய நூலில் இரா. திருமாவளவன் உருவாக்கிக் கொடுத்துள்ள மருத்துவம் தொடர்பான 110 கலைச் சொற்களை இணைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார். அவற்றுள் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு ‘வைரஸ்’ என்ற சொல்லுக்கு உருவாக்கியுள்ள ‘நச்சில்’ என்ற கலைச்சொல். மலேசிய தமிழர்கள் இதுபோன்று இன்னும் நிறைய மொழிக் கொடையைத் தமிழுக்கு வழங்கவேண்டும் என்று நாம் வாழ்த்தி வரவேற்போம்.