பெரியாரின் மடியில் அமர்ந்துள்ள குழந்தை யார் என்று தெரிகிறதா? ஆம், நானேதான். 1964-ல் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தின் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.

பெரியாரின் வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என் தாத்தா என்.டி.சாமி. சாதி ஒழிப்புப் போராளி. குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் என்ற சிற்றூர்தான் தமிழ்நாட்டில் முதன்முதலில் சாவுக்குப் பறையடிக்கும் இழிதொழில் நிறுத்தப்பட்ட ஊர். அதை நிறுத்தியவர் இவர்தான். ஊருக்கு வெளியே இருந்த சேரியை ஊருக்கு நடுவே குடியமர்த்தியமை, பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமை, தேநீர்க் கடையில் அனைவருக்கும் பொதுக்குவளை எனப் பல சாதியொழிப்புப் போராட்டங்களை நடத்தி பெரியாரின் அன்பைப் பெற்றவர்.

குடும்பத்தின் பல நிகழ்வுகளுக்குப் பெரியார் வந்திருந்தாலும் அவருடன் குடும்பப் புகைப்படம் ஒன்று எடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தாத்தாவுக்கு இருந்தது. புகைப்படம் எடுக்க ஸ்டுடியோவுக்குதான் செல்ல வேண்டும். நான் கைக்குழந்தையாக இருந்தபோது எனக்குப் பெயர் வைக்கும் நிகழ்வுக்குப் பெரியார் இல்லத்துக்கு வந்துள்ளார். அப்போது மின்வசதி வந்து வீட்டில் புகைப்பட நிகழ்வு சாத்தியமானது .

புகைப்படத்தில் பெரியாரின் இடப்பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என் அம்மாச்சி சரஸ்வதி. அதற்கடுத்து என் தாயார் அறிவொளி. பின்னே நிற்பது என் மாமா பன்னீர்செல்வம், கீழே அமர்ந்திருப்பது என் சின்னம்மா பொன்மணி, மாமன்கள் காமராஜ், கவுதமன் ஆகியோர். இப்புகைப்படம் எடுக்கும்போது என் அம்மாவின் கையில் இருந்த நான் அழுதுக்கொண்டே இருந்திருக்கிறேன். அது புகைப்படம் எடுக்கத் தொந்தரவாக இருந்துள்ளது. அதைக் கவனித்த பெரியார், “குழந்தையை என்னிடம் கொடும்மா. நான் வைத்துக்கொள்கிறேன்” என்று என் தாயிடமிருந்து தானே வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டுள்ளார்.

பெரியார் தன் மடியில் வைத்துக் கொஞ்சும்போது அவருடைய தாடி என் மேல் உரசியுள்ளது. அதுவொரு விளையாட்டுப் பொருள் என்று கருதி அழுகையை நிறுத்திவிட்டு, அவருடைய தாடியை பிடித்து இழுத்து விளையாடத் தொடங்கிவிட்டேனாம். பின்னர்ப் பெரியாரும் சிரித்தவாறே என்னை எப்படியோ சமாளித்து இந்தப் புகைப்படம் எடுக்க உதவியுள்ளார்.

பிற்காலத்தில் என் தாத்தா என்னைக் கொஞ்சும்போதெல்லாம் அடிக்கடி சொல்வார். “தமிழ்நாட்டிலேயே அய்யா மடியில் அமர்ந்து அவருடைய தாடியையே இழுத்துப் பார்த்த துணிச்சல்காரன் நீ ஒருத்தன்தான்டா”

இந்த வரலாற்று மதிப்புமிக்கப் புகைப்படம் என் கையில் கிடைக்காமல் தொலைந்திருந்தது. ஏறக்குறைய 45 ஆண்டுகள் கழித்துக் கடந்த 2010 செப்டம்பர் 10 அன்று என் வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு வீட்டை திறந்துவைக்க வந்திருந்த அய்யா நம்மாழ்வார் அவர்கள் தன் கையால் இந்தப் புகைப்படத்தை அன்பளிப்பாக அளித்து என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நான் அப்படியே திகைத்து நின்றுவிட்டேன். பிறகுதான் என் மாமா என்.டி.எஸ். காமராஜ் இப்புகைப்படத்தை அய்யா வசம் கொடுத்து புதுமனை புகுவிழா அன்பளிப்பாக என்னிடம் கொடுக்கச் சொன்ன செய்தி தெரிய வந்தது. அப்போது அய்யா சொன்ன வாசகம் இது: “அய்யாவே உங்களை மடியில் தூக்கி வைத்திருந்திருக்கிறாரே, உண்மையில் நீங்கள் பாக்கியசாலிதான்!”

இரண்டு அய்யாக்களுக்கும் நெருக்கமாக இருந்தது என் நல்வாய்ப்பே!