இந்திய சுதந்திரப் போராட்டமும், மொழிப் போராட்டமும் வெற்றிப் பெற்றமைக்கு, மாணவர்கள் அரசியலில் பங்கேற்றதும் ஒரு  குறிப்பிடத்தக்கக் காரணமாகும். ஆனால், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பொதுப் புத்தியில் உறைய வைக்கப்பட்டுள்ள ஒரு கேள்வி ‘மாணவர்களுக்கு எதற்கு அரசியல்?”

ஆனால், எதிரும் புதிருமாக வலதுசாரி அரசியலும் இடதுசாரி அரசியலும் கல்வி நிலையங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஜேஎன்யூ போன்றவையே சாட்சி. தமிழகக் கேரள எல்லையில் உள்ள ஒரு கல்லூரியை மையமாக வைத்து விரிகிறது பதிமுகம் நாவல். எளிய குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறை பட்டதாரியாக வரும் மாணவர்களிடையே அரசியல் இயக்கங்கள் என்னென்ன மாற்றங்களை உருவாக்குகிறது என்பதே கதையின் கரு. .

கேரள உணவகங்கள் அல்லது வீடுகளுக்குச் சென்றால் தரப்படும் குடிநீர் இளம் செந்நிறத்தில் காணப்படும். அது பதிமுகம் என்னும் மரத்தின் பட்டையை நீரில் கொதிக்க வைத்து உருவாக்குவதாகும். தண்ணீர் என்பது கல்வி என்பதன் உருவகமானால் அதில் கலக்கப்படும் அரசியலே பதிமுகம். அந்தச் செந்நிறமான நீர் உடலுக்கு நன்று. அதுபோலச் செந்நிறமான அரசியல் மாணவருக்கு நன்று என்பதே நாவலின் குறியீடாகக் கொள்ளலாம். தமிழ்-மலையாளம் என்னும் மொழிவாரிப் பிரிவினையையும், இந்து-முஸ்லீம் என்கிற மதப்பிரிவினையையும் கடந்து இடதுசாரி மாணவர் சங்கம் மாணவர்களை ஒருங்கிணைப்பதை நேரில் காண்பதுபோல மிக அழகாக விவரித்துச் செல்கிறார் ஆசிரியர் செழியன். கோ

அண்மையில் சிலி நாட்டில் ஒரு மாணவர் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் சூழலில் மாணவர்களுக்கு அரசியல் எந்தளவுக்கு அவசியம் என்பதை அறிய படிக்க வேண்டிய ஒரு நாவல் பதிமுகம். மாணவர்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படும் இக்காலத்தில் மாணவர்கள் தம் ஆற்றலை உணர ஒரு வாய்ப்பளிக்கிறது இந்நாவல் எனலாம். போதிய கவனம் பெறாத இந்நாவலை மீண்டும் கவனப்படுத்த ஒரு வாய்ப்பளித்த எழுத்தாளர் செழியன். கோ அவர்களுக்கு நன்றி

பதிமுகம் (நாவல்) செழியன். கோ. பாரதி புத்தகாலயம், விலை: 150, நூலை வாங்க – 044 – 24332424.