ரஷிய நாட்டில் புரட்சிக்கு பிறகு வேளாண்மையில் கவனம் செலுத்திய மக்கள் அரசு விஞ்ஞானிகளை வேளாண் ஆய்வுகளில் ஈடுபடுத்தியது. மறு கரையில் அமெரிக்க விஞ்ஞானிகளும் அதே போன்ற வேளாண் ஆய்வுகளில் இறங்கினார்கள். உலக நாடுகள் அமெரிக்க முறைமைகளை ஏற்றுக் கொண்டன. ஆனால் ரஷியா தன்னுடைய நாட்டின் விஞ்ஞானிகளை நம்பியது. அவர்கள் தங்களுடைய ஆய்வுகளை அவர்களின் தாய்மொழியில் படைத்தார்கள். அது அவர்களுக்குப் பின்னால் வந்த இளம் விஞ்ஞானிகளுக்கு புதிது படைக்க, மண்ணை இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள உதவியது என இயற்கை வேளாண் அறிஞர் திரு.பாமயன் கூறுகிறார். அது போல நம்முடைய அடுத்த தலைமுறை நீரைப் பற்றி அறிந்து கொள்ள/ஆய்வு கொள்ள முற்படுமானால் அவர்களுக்கு “நீர் எழுத்து” அவர்கள் தாய்மொழியிலேயே மேடை அமைத்துக் கொடுக்கும் என்பது திண்ணம்.

இந்த நூலை படித்துக் கொண்டிருக்கும் வேளையில் சூயஸ் வாட்டர்ஸ் எங்கள் தெருவில் மாநகராட்சி பதித்திருந்த குழாய்களை பிடுங்கி விட்டு அவர்களின் குழாய்களை பொருத்திக் கொண்டிருந்தது. கொச்சபம்பா நீர்ப் போராட்டம் எப்போது கோவையில் பிறவி எடுக்கும் என்பது நீர் எழுத்து படிக்கும் கோவைவாசிகளின் எண்ண ஓட்டமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

நீர் என்றால் என்ன?அது எப்படி உருவாகிறது? அது உலக உயிர்களுக்கு ஏன் அத்தியாவசியமானது? இன்னும் பல கேள்விகளுக்கு விடையளிப்பதோடு நீரை சுற்றி நீந்தும் வணிகம், அரசியல், குமுக சிக்கல் என எல்லாவற்றையும் அலசும் நூல் தான் நீர் எழுத்து. சூழலியல் நூல்கள் பெரும்பாலும் கவலை தரும் செய்திகளையே தந்து வாசிப்போரிடம் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும். அனால் நீர் எழுத்து அப்படிப் பட்ட சூழலியல் நூல் அல்ல. தீர்வுகளை நோக்கி நகர்த்தும் ஒரு செயல் திட்ட வரைவாக இந்த நூலை ஆசிரியர் அமைத்திருக்கிறார். இந்நூல் வாசிப்பவரை யோசிக்க வைக்கும். யோசித்த பின் அவரை செயல்படத் தூண்டும்.

பொதுவாக ஆய்வு நூல் என்றால் குறித்த பொருண்மியத்தையோ(matter) அல்லது கருத்தியத்தையோ(concept) அந்த துறைசார் மொழியில் தரவுகளை வைத்து குறித்த துறைக்கு உள்ளாகவே நின்று ஆய்வு மேற்கொள்ளப்படுவது இயல்பு. நீர் எழுத்து எனும் நூல் “நீரை” ஆய்வு செய்கிறது. நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல், அறிவியல், குமுகவியல், அரசியல், வணிகவியல், சூழலியல், புள்ளியியல், சட்டம், புழங்கு பொருள் பண்பாடு (material culture) என பல துறைகளின் முறைமைகளை துணை கொண்டு நீரினை ஆய்வு செய்கிறது.பின்னட்டையில் எழுதப்பட்ட சொல்லியமானது விற்பனைக்கான உத்தியன்று. அது உண்மையானதும் கூட.

நீரோடு உறவாடிய மாந்தர்கள் வாழ்வில் புழங்கு சொற்களாக நீர் சம்பந்தப்பட்டவை இருப்பது ஆச்சரியமில்லை. “தாய பழிச்சாலும் தண்ணிய பழிக்காதே”, “ஆழம் பாத்து கால விடு” போன்ற ஏராளமான சொலவடைகள் உண்டு. தஞ்சை வட்டார வழக்கில் நீர் சொல்லாடல்களை நிறையக் காண முடியும். காட்டாக “வண்டிய தேக்குடா” – இதில் தேக்கு என்பது நீரை தேக்குவதில் இருந்து வருகிறது. இது போல் எண்ணற்ற நீர் புழங்கு சொற்களை ஒவ்வொரு வட்டார வழக்கிலும் காண முடியும். இன்றைக்கு அவை எல்லாமே அழிந்து வருகின்றன. காரணம் நீரை நுகரத் தொடங்கி விட்டோம். நீரை உறவாடிய காலம் முடிந்து நீரை நுகரும் காலத்தில் இருக்கிறோம். இந்நூல் மழையை கணிக்கும் மூத்தவர்கள் அவற்றை சொலவடைகளின் மூலம் வெளிப்படுத்தியிருப்பதை நிறைய சான்றுகளோடு காட்டுகிறது.

மழை அறிவிக்க எத்தனை எத்தனை சொலவடைகள்!!!பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் ஒரு நுட்பம் இருக்கிறது. சொலவடைகள் எளிதாக கடத்தப்படும். மழை அறியும் முறையை சொலவடைகள் மூலம் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தி வந்திருக்கிறார்கள். மரபு அறிவு (traditional knowledge not genetic knowledge) என்பது இது தான். மழை அறியும் சொலவடைகள் இடத்திற்கு தகுந்தார் போல வேறுபடும்.அப்படியே நம்பிடக் கூடாது என்பதில் இருக்கிறது தொல்குடிகளின் அறிவு.மேகாத்து(மேல்காற்று) கீகாத்து(கீழ்காற்று) என உழவர்கள் காற்றை கணித்து பேசுவது பட்டறிவின் உச்சம் தானே! இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்களாலே தான் மழையை கணிக்க முடிந்தது. தூக்கணாங் குருவி, எறும்பு, தட்டான், ஈசல் என இவை எல்லாம் இயற்கை தரும் மழையை முன் கூட்டியே அறிவிப்பவை. இவைகளின் போக்குகளை வைத்து நம் மூதாதையர்கள் மழையை கணித்திருக்கிறார்கள். நாமோ இன்றைக்கு மழையை அறிய செய்மதிகளையும் செய்தி தொலைகாட்சி வல்லுனர்களையும் நம்பிக் கிடக்கிறோம்.

ஆண்டுக்கு வெறும் 23 நாட்கள் மட்டுமே பெய்கின்ற வடகிழக்கு பருவ மழை நீரை நாம் அடுத்த 340 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் இருக்கின்ற போதும் நாம் மழை நீரை எந்த லட்சணத்தில் சேமிக்கிறோம் என்பது அவரவர்க்கே வெளிச்சம்!

நெகிழியை நாம் பயன்படுத்துகிறோம். பயன் முடிந்ததும் தூக்கி எறிகிறோம். அது எங்கிருந்து வந்தது?எப்படி உருவானது? நமக்கு தெரியாது. தூக்கி எறிந்த பின் எங்கே போகும்? என்னவாக மாறும்? நமக்குத் தெரியாது. இப்படி நுகர்வு வாழ்கைக்கு அடிமையாகிப் போன நாம் நீர் நிலைகளைப் பற்றியும் அறியாமல் போனோம். ஏரி, கண்மாயிற்கு தண்ணீர் எப்படி,எங்கிருந்து வருகிறது? உபரி நீர் எப்படி வெளியேறுகிறது? சேகரமான நீர் எப்படி, எதன் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பன இன்றைய தலைமுறை சற்றும் அறியாத விடயங்களாகி விட்டன. இந்தக் குறையை இந்த நூல் போக்கும்.

ஏரி அறிவியல் :

ஏரி என்றால் என்ன? அரசு கட்டிடங்கள் இருக்கும் இடம். கல்வி தந்தைகள், கல்வி வள்ளல்கள், கல்வி கொழுந்தியாகள் கட்டிய கல்விச் சாலைகள் இருக்கும் இடம். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருக்கும் இடம் என்றும் தற்கால மாந்தர்கள் விடையளிப்பார்கள். Lake area, Lake View போன்ற சொற்கள் நம்முடைய புழக்கத்தில் இருப்பதைப் போல இனி Lake science என்ற சொல்லியத்தை இந்த நூல் நம் அன்றாட வாழ்வில் புழங்கச் செய்து விடும்! மேல்நிலை மாணாக்கருக்கு ‘ஏரி அறிவியல்’ என்றொரு பாடத்தையே நீர் எழுத்தில் இருந்து எடுத்து வைக்கலாம். அந்த அளவிற்கு ஏரி பற்றிய அறிவியல் இந்த நூல் முழுக்க குவிந்து கிடக்கின்றன.

ஏரிகளை ஆக்கிரமித்து நகரங்கள் எழுப்பிய ஆட்சியாளர்களை சமரசமின்றி விமர்சனம் செய்கிறார் ஆசிரியர். மூவேந்தர்கள் தொடங்கி இன்றைய ஆட்சியாளர்கள் வரை நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதும் மக்களிடம் இருந்து அபகரிப்பதும் அவர்களை அப்புறப்படுத்துவதுமாக இருந்து வருவதற்கு இந்த நூலில் சாட்சியங்களை காண முடிகிறது. வம்பு வேந்தர்கள் என்று மூவேந்தர்களை குறிப்பதற்கு பிறிதொரு காரணம் உண்டு. வேளிர் மரபினரோடு போர் தொடுத்து அவர்களின் நிலவளங்களை கைப்பற்ற நினைத்த மூவேந்தர்களை வம்பு வேந்தர்கள் என்பார் இரா.பூங்குன்றன்.

ஏரி,கண்மாய் நீர் அதிகாரம் இன்றைக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், ஆதிக்க சாதியினர் கைகளில் இருக்கிறது. அவர்களின் ஆட்டம் உயிரை எடுக்கும் அளவிற்கு போகிறது. உதாரணம் தோழர் லீலாவதி. உலக நிறுவனங்களை விட உள்ளூர் பிரமுகர்கள் நீரின் மீது செலுத்தும் அதிகாரம் ஆபத்தாக இருக்கிறது.

பிரம்மதேயங்கள் அன்றைய special privileged zone ஆக இருந்து வந்திருக்கிறது. நீர்,நிலம் ஆகியவற்றின் மீதான உரிமைகளை பறித்து பிரம்ம தேயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நீரும் சோறும் விற்பனைக்கு அல்ல என்பது தமிழர் அறம் என்று தொ.ப சொல்கிறார். ஆனால் பிரம்மதேயங்கள் உருவான பிறகு நீர் விற்கப்பட்டிருக்கிறது. கோயில் வலுவான நிறுவனமான பின்பு நீரும் நிலமும் தனியுடைமை ஆக்கப்பட்டிருகிறது. ஆதிக்க சாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. நீர் தீண்டாமை இந்திய ஒன்றியம் முழுக்க இருக்கிறது. இன்னமும் கூட.

ஆரிய X தமிழிய பண்பாட்டை நீர் மூலம் எளிமையாக விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆரிய நாகரிகம், வேதத்திலும் புராணத்திலும் நீரை ஒதுக்கி வைத்து பார்க்கிறது. திராவிட நாகரிகம் நீரை மேலாண்மை செய்து உழவுத் தொழிலில் ஈடுபட்டு உற்பத்திசார் குமுகத்தை உருவாக்கி நிற்கிறது.

தமிழ் ஒரு சூழலியல் மொழி என இந்த நூலை படித்த பின்னர் உணரலாம். தமிழில் அறிவியல் இல்லை என்போர் இந்த நூலில் தண்ணீர் குறித்த எண்ணற்ற நீர் அறிவியல் கலை சொற்களை (glossary) கண்ட பின்னர் அவர்தம் சிந்தனையை மாற்றிக் கொள்வர். காட்டாக எக்கி,எக்கர்,காயல்,காணல்,பத்தல்,குமிழி,கூவல்,கரப்பு நீர்,பரப்பு நீர்,நீரகம் என நூல் முழுக்க நிறைய நீர் கலை சொற்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.

அணைகள் தேவை இல்லை. காடுகள் போதும். காடுகளே சிறந்த இயற்கை அணைகள் என்று ஆசிரியர் சொல்கிறார். எனில் பிரம்மாண்ட அணைகள் ஏன் கட்டப்படுகின்றன என்ற கேள்விக்கு கட்டுமான பெரு நிறுவனங்கள், உலக வங்கிகள், ஆட்சியாளர்கள், அவர்களை வழி நடத்தும் அறிவியலாளர்களே விடை தர வேண்டும்.

மழைக் காடுகள் புவியின் நுரையீரல் என்றால் சதுப்பு நிலங்கள் புவியின் சிறுநீரகம். சதுப்பு நிலங்கள் இயற்கையாக நீரை சுத்திகரித்து நன்னீரை நீரகத்திற்குள் அனுப்புகிறது. இன்றைக்கு சதுப்பு நிலங்கள் அழிவின் நிலையில் இருக்கின்றன. ஏரியிலிருந்து ஏந்தல்->தாங்கல்->கரணை என வெள்ள நீரை சேகரித்து பராமரிக்க இருந்த சங்கிலித் தொடர் இன்றைக்கு அறுந்து போய் விட்டது. இருக்கின்ற கொஞ்ச சொச்சத்தையாவது பாதுகாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் இந்த நூல் தருகிறது.

ஆறுகள் புவியின் ரத்த நாளங்கள். ஆறுகளின் தோற்றம் அவற்றின் பண்பு, அவற்றின் பணி,அவற்றின் இயல்பு இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் ஒரு கூட்டம் நதி நீர் இணைப்பு எனப் பேசுவது பயனளிக்காது. ஆறுகளின் மூன்று பருவங்களை பற்றி ஆசிரியர் சொல்லும் செய்தி ஆறுகளை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.ஆறுகளின் துணை உறுப்புகளான துணையாறு,சின்னாறு,காட்டாறு,கிளையாறு போன்றவைகள் கொடுத்த நீரை பேராறுகள் மொத்தமாக வாங்கிக் கொண்டு கடல் நோக்கி ஓடின. இடையில் சிற்றணைகள், தடுப்பணைகள் என ஏற்படுத்தி நமக்கேற்றவாறு நீரை பெற்றுக் கொண்டிருந்திருக்கிறோம். காவிரி ஆற்று நீரின் வழித்தடங்களை குறித்த செய்திகளில் ஆசிரியர் வரைபடங்களை கொடுத்திருந்தால் படிப்பவர்க்கு புரிந்து கொள்ள இன்னும் இலகுவாக இருந்திருக்கும்.

வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்பட்டன. மலைகள் குடையப்பட்டன. சிற்றாறுகள், ஓடைகள் எல்லாம் அழிந்து போயின. ஆறுகளுக்கு நீர் கொண்டு வரும் பாதைகளை கபளீகரம் செய்து விட்டு ஆறுகள் இணைப்பு என்று பேசுவது வேடிக்கை தான். ஆற்று நீர் பகிர்வு சிக்கல் வரும் போதெல்லாம் ஆறுகள் இணைப்பு பேசப்படும். நீர் சிக்கல் இன சிக்கலாக மாறிவிடுகிறது. ஆறுகள் இணைப்பு என்பது ஆறுகளை மக்களிடம் இருந்தும் இயற்கையிடம் இருந்தும் திருடும் ஒரு கொடுஞ்சிந்தனை என்பதை தர்க்கங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர்.

தமிழகத்தில் பனகல் அரசரைத் தொடர்ந்து ராஜாஜி,எம்.ஜி.ஆர், கருணாநிதி,ஜெயலலிதா என அனைவரும் நீர் மேலாண்மையில் பார்வையற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். குடியிருப்புகளின் மீது அக்கறை செலுத்திய இவர்கள் குடிக்கும் நீரைப் பற்றி யோசிக்க மறந்து விட்டார்கள். இல்லையெனில் நீர் எழுத்து எனும் நூலின் தேவையே இருந்திருக்காது.

இந்திய ஒன்றியத்தில் மன்மோகன் சிங், மோடி ஆகியோரின் கொள்கைகள் நீரை எப்படியாயினும் தனியாருக்கு தாரைவார்த்து விட வேண்டும் என்றிருக்கும் பொழுது தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்தர் சிங் போன்றோரின் பங்களிப்பு ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்திலும் தண்ணீருக்கான நெருக்கடி வருவதை நீர் எழுத்து கட்டியம் கூறி எச்சரிக்கிறது. தண்ணீர் என்பது அனைத்து உயிர்களுக்குமான அடிப்படை உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டு பாதுகாக்கின்ற வரையிலும் சூழலியல் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஆசிரியர் தொகுத்து தந்துள்ள சான்று நூல்கள், துணை ஆவணங்கள் இவற்றை எல்லாம் சேகரித்து “நீர் நூலகம்” என்றொரு நூலகமே ஏற்படுத்திட தோன்றுகிறது. அத்தனை சான்றுகள். ஆசிரியருடைய அயராத உழைப்பினை அவர் பட்டியல் தரும் சான்று நூல்களை வைத்து அறியலாம். அதை விட அவருடைய கள ஆய்வுகள் இந்த நூலை மேலும் செழுமைப்படுத்தியிருக்கிறது.

நிறைய விடயங்களை பற்றி எழுத ஆவல் எனினும் அவற்றை எல்லாம் வாசிப்பு அனுபவத்தில் எழுதினால் முழுமை அடையாது என்பதால் இங்கே தவிர்க்கப்படுகிறது. கூடவே அவ்விடயங்களை பற்றி எழுத களப் பார்வையும் தேவைப்படுகிறது.

“உங்களை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்வோம். வெளியேறினால் நல்லது. இல்லையெனில் நீரைத் திறந்து உங்களை மூழ்கடிப்போம்”.

“இது அசிங்கமான முடிவு தான். ஆனால் வேறு வழியில்லை; ஒன்று நீங்கள் இதை குடிக்க வேண்டும் அல்லது சாக வேண்டும்”

“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர் தான். எனவே இதை மாற்றியமைக்க வேண்டும்”

“அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்களை அமைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்”

“அரசாங்கம் என்பது ஏசுநாதர் அல்ல. வருத்தப்பட்டு எல்லா பாரங்களையும் சுமக்க!”

மேற்கண்ட சீரிய, பொன் கருத்துகளை உலகம் முழுதும் இருக்கின்ற ஆட்சியாளர்கள் தத்தம் குடிமக்களிடம் அள்ளி இறைந்தவை. இவற்றை உற்று நோக்கினால் இவர்கள் இயக்கப்படும் பொம்மைகள் என உணரலாம். இயக்கிகள் யாரென்று தெரியாதா என்ன?

காலந்தோறும் ஆட்சிகள் மாறும். ஆட்சியாளர்களும் மாறுவார்கள். ஆனால் அவர்கள் சிந்தனை மாறாது. அவர்கள் நிறுவனமயமானவர்கள். மக்கள் சிந்தனை மாற்றம் கண்டாலே ஒழிய இங்கு இயற்கை வளங்களை காக்க முடியாது. ஆகச் சிறந்த உதாரணம் பொலிவியா நீர் போராட்டம். நீர் என்பது அடிப்படை உரிமை. நீர் ‘தேவை’ அல்ல அது உரிமை என்று மக்கள் உணர வேண்டும். நீர் ஓர் உரிமை (water is a fundamental right) என்று உருகுவே நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது போல இங்கும் சட்டம் இயற்றி நீரை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் ஆசிரியர் கூறுவது போல “ நாம் இயற்கைக்கு என்ன செய்கிறோமோ அதையே இயற்கை நமக்குத் திருப்பிச் செய்கிறது”