சமீபத்தில் யாரேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் ஒன்று பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் நான் தயக்கமின்றி பரிந்துரை செய்யும் புத்தகம் நக்கீரன் எழுதிய இப் புத்தகமே. கடந்த ஆண்டு 2019ஆம் ஆண்டு புத்தகங்களுடன் புத்தாண்டு எனும் நிகழ்வை அவிநாசி தமுஎகச கிளை நடத்தியது. அதில் என்னை இப்புத்தகத்தின் உரையாற்ற அழைத்ததை நான் எண்ணிப்பார்க்கிறேன். நீர் குறித்த கட்டுரை முதலில் நான் பாரதி தம்பி எழுதிய தவிக்குதே தவிக்குதே என்ற புத்தகத்தை தான் முதலில் வாசித்தேன். அதற்கு பிறகு இப்புத்தகம் நீண்ட நெடிய ஆய்வு தகவலும் நிரம்பியுள்ளன.

#நீர் அதிகாரம்

உலக நீர் வரலாற்றில் பொலிவியாவில் உள்ள கொச்ச பம்பா என்னும் நகரம் புகழ் வாய்ந்தது. 1998ல் உலக வங்கியிடம் 250 லட்சம் டாலர் கடன் வாங்கியதற்காக தண்ணீரை தனியாருக்கு விட நிபந்தனை விதித்தது.பெக்டெல் நிறுவனம் பொறுப்பேற்ற பின் மழை நீருக்கு கூட கட்டணம் கேட்டது.3ல் 1பங்கை கட்டணம் செலுத்த இயலாமல் மக்கள் தவித்தனர். அப்போது போராடி அந்நிறுவனத்தை விரட்டியடித்தனர்.

ஆசியாவிலேயே நீர் தனியார்மயமாக்கப்பட்ட முதல் மாநகராட்சி திருப்பூர் தான். புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி நிறுவனம் இதில் பெக்டெல் நிறுவனமும் அடக்கம் .அது குறித்து நீண்ட நெடிய கட்டுரை எழுதியுள்ளார். கோவையில் சூயஸ் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அதனை விரட்டி அடித்தது. தற்போது அது கோவை நகரின் நீர் விநியோக உரிமையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நீர் விநியோக உரிமையை தனியாருக்கு கொடுத்து பின் மீண்டும் மாநகராட்சியே கையில் எடுத்துக் கொண்டது மைசூர்தான்.

உலகெங்கும் உள்ள மக்களின் ஒரு சாதாரணமான கேள்வி கடல்நீரை குடிநீராக்கலாம் என்பதுவே.
கண்டங்களிலிருந்து ஆவியாகி செல்லும் நீரின் அளவு 70 ஆயிரம் கன கி.மீட்டர் மழையாக கிடைப்பது ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன மீட்டர் அதாவது கூடுதலாக 40 ஆயிரம் கன கி. மீட்டர் நமக்கு கிடைக்கிறது. இதனை சேமித்து வைத்து நீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
ஒருவேளை கடல்நீரை குடிநீராக்கினால் அதற்குஅதிக மின்சாரம் தேவைப்படும்.
மின் பற்றாக்குறை உள்ள நமக்கு அது கடினம் தான்.அப்படியே செய்தாலும் சொற்ப க.கி.மீ நீர்தான் கிடைக்கும்.

இதற்கு இடையே நீர் பூங்காக்களில் நீர் வீணடிப்பது பெண்கள் நீருக்காக படும் அவலம் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.மேலும் போர்வெல் போடும் அவலத்தையும் அதிக நீரை உறிஞ்சும் மக்களையும் புள்ளி விபரங்களோடு குறிப்பிடுகிறார் ஆசிரியர்.. இக்கட்டுரையில்

#ஜான் பெர்கின்ஸ்ஒருமுறை சொன்னார்.. தங்கத்தையும் எண்ணெயையும் சேர்ந்தால் என்ன மதிப்போ அந்த மதிப்பு எதிர்காலத்தில் நீருக்கு இருக்கிறது. எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நீருக்கு நாம் உரிமையாளர் ஆகி விடவேண்டும். எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள்

தேசிய நீர் கொள்கை 2012 ஆம் ஆண்டு ஒருவரை வெளியிட்டது. அதில் நீர் சேவையானது தனியார் வசம் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பருவமழை குறித்து தனது கட்டுரையில் எல் நினோ லா நினோ பற்றி தெரிவிக்கிறார். அதாவது கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட சற்று அதிகரித்தால் அது தான் எல்நினோ. எனினும் அது உருவான நமக்கு தென்மேற்கு பருவமழை குறையும். மாறாக கடலில் வெப்பம் வழக்கத்தைவிட குறைந்தால் அதன் பெயர் லாநினா. இதனை பெருநாட்டின் கடலில் கணக்கிடுகின்றனர்.

குளிர்கால மழை குறித்து சொல்லும்போது குளிர்காலத்தில் ஒரு மரம் ஈரப்பதத்தை பனித்துளிகள் ஆக மாற்றி மழையாக தரும். உதாரணத்திற்கு கோவில்பட்டியில் மாதம் சராசரியாக 24 இரவுகளில் மட்டும் பெய்யும்.ஒவ்வொரு நீரிலும் 0.5 மில்லி மீட்டர் அளவுக்கு நீராக மாற்றும். காவிரிப்படுகையில் 52 இரவுகள் பனிபெய்யும் இது சராசரியாக 0.14 மி.மீட்டர் அளவில் பனியை நீராக மாற்றும்.

மதுரை வில்லாபுரம் இடதுசாரி கவுன்சிலர் லீலாவதி நீர் விற்பனைக்கு குரல் கொடுத்ததால்
1997ல் ஏழுபேர் கொண்ட கும்பல் 24இடங்களில் வெட்டி வீழ்த்தியது. நீருக்காக உயிர்நீத்த அந்த லீலாவதிக்குதான் இப்புத்தகத்தை சமர்ப்பித்துள்ளார்.

#ரசித்தது

*பத்து நாளுக்கு ஒரு முறை என்று மாதம் மும்முறை மழை பெய்வதால் இதனை மும்மாரி என வழங்குகிறார்கள்

*தோட்டம் துரவு என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. தோட்டம் சரி துறவு என்றால்.. பெரிய அளவில் பாசனத்திற்கு பயன்படும் கிணறுதான் துரவு. இதன் நீள அகலம் 1:1,1:2,1:3 எந்த விதத்தில் அமைய வேண்டும்

*உலகின் இரண்டு இடங்களில் குளங்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. ஒன்று எகிப்து இன்னொன்று தமிழ்நாடு

*வயக்காடு என்பதை ஆங்கிலேயர்கள் உச்சரிக்கத் தெரியாமல் VAYACUT என்றழைக்க அச்சொல்லில் இருந்து V விழுந்து AYACUT ஆகி தமிழிலும் ஆயக்கட்டு ஆக மாறிவிட்டது

*ஆறுகள் தொடர்ந்து நீரை கடலுக்கு அளித்தால் இயற்கை அதை திருப்பி அளிக்கும் என்கிற படத்தை கற்றுக்கொள்ளவேண்டும்

*உலகிலேயே கட்டி முடிக்கப்படாத அணைகள் அதிகம் இருப்பது இந்திய ஒன்றியத்தில் தான்

*தமிழ்நாட்டில் நில அமைப்பில் நீர் ஊடுருவும் தன்மை கொண்ட மண் வகை வெறும் 27 சதவீதம் மட்டுமே, மீதமுள்ள 73 சதவீதம் நிலத்தின் அடியில் பல வித பாறைகள் இருப்பதால் அங்கு நீர் ஊடுருவும் தன்மை குறைவு

*500 சதுர அடி பரப்பளவுள்ள மாடிகளைக் கொண்ட 20 ஆயிரம் வீடுகள்.. மழை நீரை முழுவதும் கிணற்றிலோ நிலத்திலோ சேமித்தால் அது மேட்டூர் அணையின் கொள்ளளவு சமம்

*அதிக நீர் உட்கொள்ளும் தொழில்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு மூன்றாம் உலக நாடுகளில் தொடங்குகின்றன

இதுதவிர தமிழ்நாடு நீர் கொள்கைக்கான 20 பரிந்துரைகளை பின்னிணைப்பாக ஆசிரியர் கொடுத்துள்ளார்

#கற்றதும் பெற்றதும்

எதிர்காலத்தில் நீர் குறித்தும் அதில் அயல்நாடுகளின் வணிகப் பொருளாகவும் மாறவிருக்கும் நீர் குறித்த எச்சரிக்கை நூல்.இதோடு ஆறுகளை இணைத்தல், தமிழக மழைவளம்,காவிரி, கல்லணை குறித்து அறியாத செய்திகளை பகிர்ந்துள்ளார்.சங்கப்பாடல்களில் நீர் குறித்தும்,கிராமத்து சொலவடை குறித்தும் ஆய்ந்து எழுதுயுள்ளார். எழுதுவதற்காகவே பல இடங்களில் பயணித்தது காணமுடிகிறது.

ஒருகார் ஏற்றுமதியாகும் போது 6இலட்சம் லி தண்ணீர் ஏற்றுமதியாவதாய் படித்த நினைவு. வாழ்வாதார நீரை வணிக ஆதாரத்துக்கு பயன்படுத்துவதை நினைக்கும்போது வேதனை தருகிறது.படிக்கும் அனைவரையும் குற்ற உணர்வுடன் தான் படிக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.நீரை பூமியில் தேடாதே வானத்தில் தேடு எனும் நம்மாழ்வர் வரிகளே நினைவுக்கு வருகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு