‘நீர் எழுத்து’ நூலுக்காக கள ஆய்வில் ஈடுப்பட்டிருந்த நேரம். ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டு பழமையான பழந்தமிழரின் நீர்க் கட்டுமானத்தின் தற்போதைய நிலைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதுபற்றிய தகவல் நூலில் இருந்து…

திரு. கே.வி.சௌந்தரராஜன் எழுதிய ’Kaveripattinam Excavations 1963-73’ எனும் தொல்லியல் ஆய்வு நூலில் புகார் நகரில் கிடைத்த பழைய தூம்புக் கட்டுமானம் ஒன்றினைப் பற்றிப் படித்தேன். இது கி.பி. 2 – 3 ஆம் நூற்றாண்டு காலத்துத் தொழில்நுட்பம். பூம்புகாருக்குத் தெற்கேயுள்ள வானகிரியில் ஒரு கால்வாயில் இது கண்டறியப்பட்டது. செங்கற்களாலான அக்கால்வாயின் வாயிற்பகுதியின் 24 மீட்டர் அகலமானது. அகலமோ 8 மீட்டர். அதில் எளிதாக நீர் வெளியேறும் வகையில் 1.5 மீட்டர் உயரமும் 83 செ.மீ அகலமுள்ள வாய்ப்பகுதி இருந்தது.

நேராக இல்லாது அகன்ற வளைவாக அமைந்த இவ்வாயில் நீரியல் வளைவுகளோடு அமைக்கப்பட்ட நுட்பம் ஆகும். .அதிகளவில் நீர் வருகையில் வளைவின் காரணமாக வேகம் மட்டுப்பட்டு மண் அரிப்பு ஏற்படுவதும், கட்டுமானம் சேதப்படுவதும் இதனால் தடுக்கப்படும். இந்தச் சேதத்தை ‘எடியின் விளைவு’ (EDDY’S CURRENT) என நீரியலில் கூறுவர். கட்டுமானத்துக்குச் சிறப்புச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. 42X24X10 செ.மீ அளவுள்ள இந்தக் கற்களைத் தற்காலச் செங்கற்களின் அளவான 21X10X6 செ.மீ. அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாடு புரியும். இக்கால்வாயில் சிறிய அளவில் சாய்வு (Gradient) தரப்பட்டு, இறங்கும் நீர் படிப்படியாகப் போகும் விதத்தில் படிகள் அமைக்கப்பட்டிருந்ததும் சிறப்பாகும்.

இத்தகைய அரிய கட்டுமானத்தைப் பற்றி அறிந்ததும் வானகிரிக்கு பயணமானோம். ஊர்க்காரர்கள் அந்த இடத்தைப் பற்றித் தெரிவித்தும் அதைத் துல்லியமாக அடையாளம் காணமுடியவில்லை. பிறகு மண்ணுள் பாதிப் புதைந்திருந்த தொல்லியல் துறையின் பழைய இரும்புச் சுழற்கதவு ஒன்றை வழிப்போக்கர் ஒருவர் அடையாளம் காட்டினார். சுற்றிலுமிருந்த வேலிகள் அகற்றப்பட்டுக் கல் தூண்கள் மட்டுமே நிற்க, புகழ்பெற்ற புகார் தூம்பைக் காணவில்லை. உள்ளூர்க்காரர் ஒருவரிடம் விசாரித்தால் மக்களால் பெயர்த்துச் செல்லப்பட்ட செங்கற்கள் போக மீதிக் கட்டுமானம் இரண்டு மீட்டர் ஆழத்தில் மீண்டும் புதையுண்டு விட்டது என்றார்.

தற்போது அவ்விடம் குப்பைக் கொட்டும் இடமாகவும் பொதுக் கழிப்பிடமாகவும் மாறியுள்ளது. தஞ்சைப் பெரிய கோவிலின் வயதைக் காட்டிலும் இருமடங்கு மூத்த வயதுடைய சிறப்புமிக்க புகார்த் தூம்பின் இன்றைய துயரநிலை இது.