பெண்களும் நீரும்

‘நீர் எழுத்து’ நூலை தண்ணீருக்காகப் போராடி உயிர்நீத்த தோழர் மதுரை லீலாவதி அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளேன். தண்ணீருக்கான அவருடைய போராட்டம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து நூலிலுள்ள ‘பெண்களும் நீரும்’ என்ற தலைப்பில் இருந்து சில பகுதிகள்.

புவியில் இருந்து நிலவுக்கு 64,000 முறை நடந்து சென்று வர முடியுமா? என்று கேட்டால் முடியாது என்று பதில் சொல்வோம். ஆனால் இந்திய ஒன்றியம் முழுவதிலும் உள்ள நம் பெண்கள் அவ்வளவு தொலைவுக்குப் நடக்கிறார்கள். ஆனால் அது நிலவை நோக்கிய நடையல்ல; நீரை நோக்கிய நடை. ஆண்டு முழுதும் நீருக்காக நம் பெண்கள் அவ்வளவு தொலைவு நடக்கிறார்கள் என்கிறது நஸ்ஸா (NASSA) அறிக்கை.

2012 ஆம் ஆண்டு கணக்கின்படி ஒரு பெண் நீருக்காக 173 கி.மீ நடந்தார். இந்தத் தொலைவு 2009-ல் நடந்ததைவிட 25 கி.மீ கூடுதலாகி விட்டிருந்தது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும். ஊர்ப்புறப் பெண்கள் ஆண்டுக்கு 210 மணி நேரம் நீரெடுக்கச் செலவிடுகின்றனர். இதை வேலை நாட்களாகக் கணக்கிட்டால் ஏறக்குறைய 27 வேலை நாட்கள் வருகிறது. அதாவது 27 நாட்கள் கூலி இழந்து நீருக்காக அலைகிறார்கள். இந்திய ஒன்றியம் முழுமையும் இவ்வாறு 15 கோடி பெண்கள் அலைகிறார்கள். இவர்களின் மொத்த வேலை நாட்களின் இழப்பை மதிப்பிட்டால் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு என்கிறது அந்த அறிக்கை.

நகரங்களில் மட்டும் என்ன வாழ்கிறது? பெண்கள் ஒன்று குழாய் முன் காத்திருக்க வேண்டும் அல்லது தண்ணீர் லாரிக்காகக் காத்திருக்க வேண்டும். கடிகாரத்துக்கு மட்டும்தான் இரவும் பகலும் பெண்களுக்கல்ல. குழாயடிச் சண்டை என்கிற சொல் பெண்களைக் குறித்த இழிவுச் சொற்களாக மாறியுள்ளன. உண்மையில் இது இழிவோ நகைச்சுவையோ அல்ல. தம் குடும்பத் தேவைக்கான அன்றாட நீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற பதட்டமே குழாயடிச் சண்டைக்குக் காரணம். தமக்கு நீர் கிடைப்பது உறுதியானால் எந்தப் பெண்ணும் இங்குச் சண்டையிடப் போவதில்லை. அந்த நீர் உறுதியைத் தராத அரசு நிர்வாகம்தான் அதற்காக வெட்கப்பட வேண்டும்.

உலகெங்கும் நீர்ப் பற்றாக்குறையின் பாதிப்பை முழுமையாக உணர்பவர்கள் பெண்களே. இன்றும் நீர் சார்ந்த 80% பணிகள் பெண்களையே சார்ந்துள்ளது. எனவே குடிமை நீர் குறித்த கொள்கை முடிவுகளில் பெண்களுக்கே முதன்மையான பங்களிப்பு இருக்க வேண்டும். பெண்களால் நிர்வகிக்கப்பட்ட பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் நீர்ச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதே இதற்குச் சாட்சி.