”ஆற்றுநீர் வீணாகக் கடலில் கலக்கிறது” என்பவர்களின் கவனத்துக்காக…

ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ ஆற்றின் மீது 1963-ல் கட்டப்பட்டது க்ளன்கேன்யான் அணை. ஆறுகள் இணைப்பு ஆதரவாளர்களுக்கு இது வெற்றிக்கதை. ஆனால் கொலராடோ ஆறு இன்று மிகவும் இளைத்து நீர் சொட்டு சொட்டாக அதன் வடிநிலத்தை அடைவதைப் பற்றி அவர்கள் பேசமாட்டார்கள் (படம்: கொலராடோ ஆற்றுக் கழிமுகம்) அணைகட்டிய பிறகு இருபது ஆண்டுகளுக்கு மேல் கொலராடோ ஓடாமல் வறண்டு விட்டது. நீரோட்டம் சுருங்க வடிநிலப் பகுதியின் ஈரமும் குறைந்தது. தொன்றுதொட்டு இருந்த சதுப்புநிலத்தில் சிறுதுண்டு மட்டுமே எஞ்சியுள்ளது. மீன்பிடிப்பும் அழிந்து, அங்கு வசித்த பழங்குடிகளான கொக்கொபா இந்தியர்களின் பல நூற்றாண்டுக்காலப் பாசனமும் அழிந்துவிட்டது.

இதுபோல் சீனாவின் மஞ்சள் ஆறு ஆண்டுக்கு 226 நாட்கள் கடைமடைப் பகுதியை அடைவதே இல்லை. 1970-களில் கடலை அடைவதற்கு முன்னர் 13. கி.மீ நீளத்துக்கு வறண்டிருந்த மஞ்சளாறு 1990-களின் நடுவில் 700 கி.மீ நீளத்துக்கு வறண்டது. இதை சொன்னால் பொருளாதார வளர்ச்சிக்குத்தானே திட்டங்கள் என்ற விவாதம் எழலாம். ஏன் கடைமடையில், கழிமுகத்தில் பொருளாதாரம் வளராதா? மஞ்சள் ஆற்றின் கடைமடையான ‘ச்சான் டோங்’ பகுதியின் கதையைக் கேளுங்கள். ஆற்றுநீர் கடலை அடையாததால் அங்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு 160 கோடி டாலர்.

கடலுக்கு நீர் முறையாக நீர் சென்று சேர்ந்தால் என்னவாகும்? இயற்கை திருப்பிக் கொடுக்கும். கடலில் ஆற்றுநீர் சேர்வதால்தான் அங்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் செயற்பாடுகள் நடக்கின்றன. கடலில் கலக்கும் நன்னீர் அளவைப் பொறுத்தே பருவகால மாற்றங்கள் கடல்நீரில் ஏற்படும். இது கடலோரத்தில் மட்டுமல்லாது கரையிலிருந்து ஆயிரம் கி.மீ. தொலைவுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் நோவா ஸ்கோட்டியா கடலியல் ஆய்வு மைய அறிவியலாளர் திரு. கென்னத் டிரிங்வாட்டர்.

கடலுக்கு நீர் தராத கொலராடோ ஆற்றில் 1980களில் வந்த எல்நினோ பெருவெள்ளமும், 1990களில் வந்த சிறு சிறு வெள்ளங்களும் வடிநிலப் பகுதிக்கு நீரையளித்தது. இதன் பலனால் அதைத் தொடர்ந்த ஆண்டுகளின் நீர்ச்சுழற்சி மீட்புக்கு உதவின. ஆறுகள் தொடர்ந்து நீரைக் கடலுக்கு அளித்தால் இயற்கை அதைத் திருப்பி அளிக்கும் என்கிற பாடத்தை இது கற்றுக்கொடுத்தது என்கிறார் சாண்ட்ரா போஸ்டல். இவ்வளவுக்கும் ஒரு விழுக்காடு நீரை மட்டுமே அப்போது கொலராடோ கடலுக்கு அளித்திருந்தது.

ஒரு வருத்தமான செய்தி: இன்று உலகின் 25% ஆறுகளின் நீர் கடலில் கலப்பதற்கு முன்னரே வறண்டு விடுகின்றன.