கனலி இலக்கிய மின்னிதழ் அண்மையில் சுற்றுச்சூழல் சிறப்பிதழ் வெளியிடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘இலக்கிய இதழில் ஏன் சுற்றுச்சூழல்?’ என்று சிலருக்கு கேள்வி எழுவதாகத் தெரிகிறது. அப்படி நினைத்தால் அது அவர்களின் அறியாமைதான். சங்க இலக்கியமே சிறந்த சுற்றுச்சூழல் இலக்கியம்தான். அப்படியல்ல, இது நவீன இலக்கியக் காலம் என்றால் அது தொடங்கிய இங்கிலாந்திலிருந்தே நாமும் தொடங்குவோம். 

இங்கிலாந்தில் இருந்துதான் பசுமை இலக்கியங்களின் குரல்களும் எழும்பின. அதற்கொரு காரணம் இருந்தது. உலகிலேயே மிகப் பெருமளவில் நகரமயமாக்கப்படுள்ள நாடு இங்கிலாந்துதான். இயற்கை கவிஞரென அறியப்பட்டிருந்த ‘வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்’ வெறும் கவிதைகளை மட்டும் எழுதிக்கொண்டிருக்கவில்லை. அவர், தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் தான் மிகவும் விரும்பிய இயற்கை வனப்புமிக்க ‘லேக்’ மாவட்டத்திற்குத் தொடர்வண்டித் திட்டம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்.

வோர்ட்ஸ்வொர்த் காலத்து இளைய கவிஞரான ஜான் கிளேர் என்பவர் நகர்புறச் சந்தைகளுக்கான சாகுபடிக்காக ஊர்புறங்கள் பாதிக்கப்படுவதைப் பாடியவர். அடுத்து, கவிஞர் ஜான் ரஸ்கின் இங்கிலாந்து ஆறுகள் கழிவுநீர்க் கால்வாய்களாக மாற்றப்பட்டதையும் நகரத்தின் காற்று மாசு, அமிலமழைக் குறித்தும் பேசினார். தொடர்ந்து வில்லியம் மோரிஸ், எட்வர்ட் கார்ப்பென்டர், அமெரிக்காவின் வால்ட் விட்மன் மற்றும் ஹென்றி டேவிஸ் தோரே ஆகியோரும் சூழலியல் குறித்து எழுதியவர்களே. ஆக்டேவியா ஹில் குறிப்பிடத்தக்க பெண் சூழலியலாளராக விளங்கினார்.

ஜெர்மனி வெகுவேகமாக இயந்திரமயமானபோது அங்கேயும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களிடையே சுற்றுச்சூழல் சிந்தனைகள் தோன்றின. அவர்களுள் ரெய்னர் மரியா ரில்கே குறிப்பிடத்தக்கவர். தொடர்ந்து வில்லியம் ஹெய்ன்ரிச் ரெய்ல் ஸ்காண்டிநேவியாவின் நாவலாசிரியர் நட் ஹேம்சன் ஆகியோரும் சூழலியல் சிந்தனைக் கொண்டோராக விளங்கினர். இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களும் அதன் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டதாலேயே பிறந்தது. பட்டியல் நீளும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.  

நவீன தமிழ் கவிதையின் தோற்றமெனக் கருதப்படும் பாரதியாரின் வசனக் கவிதைகளும்கூடச் சூழலியல் பொருண்மைக் கொண்டதுதானே? புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படும் ந.பிச்சமூர்த்திப் பறவைகளை வைத்து ஒரு காவியமே எழுதியுள்ளர். ;மாகவிகள் என்ற தலைப்பில் அது வெளிவந்தது என்கிறார் தஞ்சை பிரகாஷ். ந.பிச்சமூர்த்தியின் எழுத்தில் காணும் பூக்கள், மரங்கள், செடிவகைகள், விலங்குகள் அவற்றின் விசித்திரக் குணங்கள் நம் சாதாரண வாழ்க்கையில் நமக்குத் தெரிய வராதவை என்பார் வெங்கட் சாமிநாதன். இந்த நுட்பத்தை நாம் இடையில் தவறவிட்டுவிட்டோம். தற்போது நிலைமை மாறிவிட்டது.

ஒவ்வொரு பதின் ஆண்டுகளுக்கும் தமிழ் எழுத்துலகில் ஒரு கருத்தியல் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. தலித்தியம், பெண்ணியம் போலத் தற்காலம் பசுமை இலக்கியத்துக்கு உரியது என்பதில் எந்த அய்யமும் இல்லை. இதைக் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் பசுமை இலக்கியத்தின் மேல் தம் கவனத்தைத் திருப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. மூத்த ஆளுமைகள் பலரும் தம் எழுத்துக்களில் சூழலியலை ஏற்கனவே பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று இதழியல் உலகிலும் ‘சுற்றுச்சூழல்’ தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. தமிழ் இந்துதிசை நாளிதழ் ‘உயிர்மூச்சு’ என்று ஒரு தனி இணைப்பிதழே வெளியிட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னரே ‘திசைகள் எட்டும்’ மொழிப்பெயர்ப்பு இதழ் ஒரு சுற்றுச்சூழல் சிறப்பிதழை வெளியிட்டது. .‘மணல்வீடு’ போன்ற இலக்கிய இதழ் சுற்றுச்சூழல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. ஓலைச்சுவடி இதழ், ‘கலை, இலக்கியம், சுற்றுச்சூழல் இதழ் என்றே அறிவிப்பு வெளியிட்டு இதழைத் தொடங்கியது. தற்போது ‘கனலி’ மின்னிதழ் இன்னும் நுணுக்கமாகத் தோழர் சு. அருண் பிரசாத் ஒத்துழைப்புடன், ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்ற சிறப்பிதழ்’ ஒன்றை வெளியிடவிருக்கிறது. இதை வாசகர்களுடன் நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.