மார்ச் 30 என் பிறந்தநாள். இந்நாளில் வரலாற்றில் என்ன குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன என்று தேடினேன். சுப. வீரபாண்டியனின், ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ நூலில் (தொகுதி-4) ஒரு தகவல் கிடைத்தது.

அன்றைக்கு ரயில் நிலையங்களில் முறையே S.I.R மற்றும் M.S.M என்று இரண்டு உணவகங்கள் இருந்துள்ளன. அந்த ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு நுழைவாயில்கள் இருந்துள்ளன. ஒரு நுழைவாயில் முகப்பில் ‘பிராமணாள்’ என்ற போர்டு தொங்கும். மற்றொன்றில் ‘இதராள்’ என்ற போர்டு இருக்கும். இந்த இதராள் பிரிவானது சூத்திரர் பஞ்சமர் அனைவருக்கும் பொதுவானது. அதாவது பிராமணாள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒரே தட்டுதான். இதை இன்றைக்கு சாதிப் பெருமை பேசுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.  

சாதியின் காரணமாக உணவகத்தில் ஒன்றாக சாப்பிடும் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து பெரியார் போராட்டத்தை அறிவித்தார். போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட M.S.M நிறுவனம் அந்த போர்டை அகற்றிவிடுவதாக அறிவித்தது. ஆனால் மற்றொரு நிறுவனமான S.I.R அதற்கு உடன்படவில்லை. எல்லோரும் சேர்ந்து உண்ணலாம் என்று அறிவித்தால் வைதீக யாத்திரிகர்கள் தமது உணவகத்துக்கு வரமாட்டார்கள் என்று காரணம் சொல்லியது.

ஆனால் வைதீக யாத்ரீகர்கள் பொதுவாக வெளி உணவகங்களில் உணவு உண்ணும் வழக்கம் இல்லாதவர்கள். தவிர அவர்கள் பயணத்தில் கூஜாவில் நீரும், கட்டுச்சாதமும் கொண்டு செல்லும் வழக்கமுடையவர்கள். இதை சுட்டிக்காட்டியும் அந்த உணவக நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை. வேறுவழியின்றி அந்த நிறுவனத்தின் போக்கைக் கண்டித்து கரூரில் 1941 மார்ச் 23-ல் மாநாடு ஒன்றை பெரியார் அறிவித்தார். ஆனால் மாநாடு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அந்த நிர்வாகம் அச்சம் கொண்டு போர்டை எடுத்து விடுவதாக அறிவித்தது.

மாநாடு மகிழ்ச்சியாக நடந்துள்ளது. அதில் பெரியாரும் அண்ணாவும் வரும் 30ந் தேதியை (1941 மார்ச் 30) ‘இழிவு நீங்கிய நாள்’ எனக் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று ரயில்வே உணவகங்கள் மட்டுமன்றி பொது உணவகங்களிலும் சாதி வேறுபாடற்று உணவு உண்ண முடிகிறது. இப்படியொரு சமூக நிகழ்வுக்கு கால்கோளிட்ட இழிவு நீங்கிய நாளில் என் பிறந்தநாள் அமைவது பெரும் மகிழ்ச்சி.