வெகு மாதங்களுக்கு முன்னே எழுத நினைத்த பதிவு. காடு என்றால் அது பைனாகுலருடனும் கேமராவுடனும் முடிந்து போவதல்ல. காடுகளில் வாழும் விலங்குகளையும் பறவைகளையும் மட்டும் மையமிட்டுக் காட்டை மிகுகற்பனை புனைவாக்கும் எழுத்துக்களாக அல்லாது  காடுகள் என்றால் அது பழங்குடிகளும் இணைந்ததே என்ற பார்வையில் எழுதப்பட்டுள்ளதே ‘காடர்’ சிறுகதைத் தொகுப்பின் சிறப்பு.

காட்டிலுள்ள விலங்குகளின் வாழ்க்கையைப் பழங்குடிகளின் பார்வையில் பேசுகிறது இந்நூல், ‘மீனுக் குடிச்சு ஆத்துத் தண்ணி வத்தாது’ என்று வாழும் காடர்கள் போன்ற அசல் பழங்குடிகளின் வாழ்வை விவரிக்கும் அதே நேரத்தில் யானை வழித்தடத்தில் ஆசிரமம் கட்டியுள்ள சாமியாரின் அரசியலையும் அம்பலப்படுத்துகிறது. நாட்டின் நிகழ்கால அரசியலைக் காட்டுமொழியில் பேசும் ‘காட்டு மாதா கி ஜெ’ சிறப்பான அரசியல் பகடி.

உயர் கல்விக் கிட்டாத பழங்குடி மாணவன், காடுகளில் இருந்து பழங்குடி குடியிருப்புகளின் கட்டாய இடப் பெயர்வு உள்ளிட்ட சமகாலச் செய்திகள் சுவை குறையாது கதைகளாக்கப்பட்டுள்ளன. வன உரிமைச் சட்டம் 2006 மீண்டும் கவனத்துக்குள்ளாகி இருக்கும் இக்காலகட்டத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பாகப் பரிந்துரைக்கிறேன். தோழர் வே. பிரசாந்த் கவனிக்கத்தக்க ஓர் எழுத்தாளராக உருவாகியிருப்பதற்கு வாழ்த்துகள்!

காடர், (சிறுகதை) பிரசாந்த். வே. எதிர் வெளியீடு, விலை: 130, நூலை வாங்க – 99425 11302.