எல்லா மூத்த எழுத்தாளர்களும் சந்திக்கும் சிக்கல்தான் இது. புதிய மற்றும் இளம் எழுத்தாளர்கள் நிறைய நூல்களை அனுப்புகிறார்கள். அப்போது வெவ்வேறு துறை சார்ந்த வேறு பல நூல்களைப் படித்துக் கொண்டிருப்பேன். அல்லது ஆய்வுநோக்கில் குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களுக்குள் மூழ்கியிருப்பேன். எனவே, அனுப்பப்படும் எந்த நூலையும் உடனே உடனே படிக்கும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஆனால், பலரும் இதனைப் புரிந்துகொள்வதில்லை.

ஒரு நூலை அனுப்பியதுமே படித்தாயிற்றா என்று கேட்கிறார்கள். இல்லை என்றால் இன்னுமா படிக்கவில்லை என்பர். நமக்கு அவருடைய நூலைப் படிப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை என்பது போல அந்தத் தொனி இருக்கும். இலக்கியம் போன்று ஏதேனும் ஒரு துறை சார்ந்த நூல்களை மட்டுமே படிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்திருந்தால் அனுப்பப்படும் நூல்களை உடனே படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நானோ படிக்காத துறைகள் இல்லை. இவ்வளவுக்கும் வீட்டில் இருந்தால் நாளொன்றுக்கு 8-10 மணி நேரம் படிக்கிறேன்.

நூலை வாசித்துவிட்டேன் என்று சொன்னாலும் விடுவதில்லை. ஏதாவது அதைப் பற்றி எழுது என்பார்கள். சரி என்று எழுதினாலும் விடுவதில்லை. ஒருவர் தொலைபேசியில் அழைத்து, ‘நான் நூறு பக்கத்துக்கு நூல் எழுதியுள்ளேன். நீ என்ன வெறும் அரைப்பக்கத்துக்கு மட்டும் மதிப்புரை எழுதியுள்ளாய்’ என்று மிரட்டுகிறார். இதனால், நூல்களைப் பற்றி நாலு வரி எழுதக்கூட அச்சமாக இருக்கிறது. எனவே, எழுதாமலே இருந்து விடுகிறேன். சமயத்தில் அவருக்கு எழுதினாய் எனக்கு ஏன் எழுதுவதில்லை என்கிற துணைக் கேள்விகளும் வருகின்றன. இதனால் யாரும் நூல் அனுப்ப வேண்டும் முகவரி தாருங்கள் என்றால் அச்சப்பட்டு அனுப்பாமல் தப்பித்து வருகிறேன்.

உண்மையில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், நிறைகளோடு குறைகளையும் சொல்ல முடிவதில்லை. பலரிடமும் ‘என் நூலைப் பாராட்டு, அதுமட்டுமே உன் வேலை. விமர்சனம் வேண்டாம்’ என்கிற தோரணையே இருப்பது வருத்தமாக உள்ளது. இதையெல்லாம் மீறி நூல்களை அனுப்பும் தோழர்களும் இருக்கிறார்கள். என்னைப் போலவே அவர்களும் அனுப்பிய நூலைப் படித்தாயா என்று இன்று வரை கேட்டதில்லை. அதற்காகவே, அந்த நூல்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

இத்துடன் நானே தேடிப் படித்த நூல்களையும் பற்றியும் என் வலைப் பக்கத்தில் அவ்வப்போது நாலு வரிகளாவது எழுத ஆசை. நான்கு வரிகள் மட்டும்தானா என்றோ, குறைகளை ஏன் சுட்டுகிறாய் என்றோ யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.