காரக்பூர் ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் 2022ஆம் ஆண்டின் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களுக்காக வலதுசாரி அறிஞர்கள் பெருமைக்கொள்ளும் அதேவேளையில் உலகக் கல்வியாளர்கள் மற்றும் வரலாற்றாளர்கள் இடையே அதுவொரு கேலிப்பொருளாக மாறியுள்ளது.

‘இந்திய அறிவுத் தளத்தின் அடித்தளத்தை மீட்டெடுத்தல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அக்காலண்டரின் அதன் மூன்று துணைத் தலைப்புகளும் இடம் பெற்றுள்ளன. ‘வேதங்களின் இரகசியத்தை அங்கீகரித்தல்’, ‘சிந்துவெளி நாகரிகத்தின் மறுவிளக்கங்கள்’, ‘ஆரியப் படையெடுப்பு கட்டுக்கதைக்கு மறுப்பு’ என்கிற அதன் துணைத் தலைப்புகள் அதன் நோக்கத்தைத் தெளிவாக்குகிறது. இதற்கும் கீழே 12 சான்றுகள் அதாவது மாதத்துக்கு ஒன்றாக அவை தரப்பட்டுள்ளன. சான்றுகள் என்பதை திரிபுகள் என்று கொள்ளலாம். ஒவ்வொரு சான்றையும் அவர்கள் வலிய திரிப்பதற்கு அவர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கண்டு பரிதாபமாக இருக்கும் அதேசமயம் வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவையாகவும் இருக்கிறது.

இதுகுறித்து ஆங்கில மாற்று ஊடகங்களும் வரலாற்றாளர்களும் விளாசித் தள்ளியுள்ளனர். ஒரு சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இப்போக்குக்கு அதன் மேனாள் மாணவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐஐடி காரக்பூரும் Centre for excellence for Indian knowledge systems என்கிற அமைப்பும் இணைந்து உருவாக்கிய இக்காலண்டரின் அடிப்படை நோக்கம், ‘ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல’ என்கிற கருத்தியலை உருவாக்குவதே. இதை இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனையின் சவப்பெட்டிமீது அடிக்கப்பட்ட கடைசி ஆணி என்று வர்ணிக்கிறது ஸ்குரோல் இதழ்.  இந்த காலண்டரில் ஆய்வுக்கு முன்னரே முடிவுரை எழுதப்பட்டுள்ளதாகச் சாடுகிறது அது.

இது அறிவியல் முறைமையல்ல. அதில் அளிக்கப்பட்டிருக்கும் சான்றுகளும் அறிவியல்பூர்வமானதல்ல பல முக்கிய கூற்றுகள் ஆச்சரியக் குறிகளுடன் இடம்பெற்றுள்ளன. எனவே அதை இதை ஓர் ஆய்வு என்பதைவிட ஒரு பார்வை கோணம் என்பதே பொருத்தமானது என்கிறது அது. பார்வைக் கோணத்தை அறிவியல் முடிவாக வைப்பதே ஆபத்தானதாக உள்ளது.

ஒரு நல்ல அறிவியல் ஆய்வின் அடிப்படை தேவை சார்பற்று இருப்பது. ஒரு அறிவியலாளருக்கு ஆய்வுமுடிவென்பது ஒரு புதிய கோட்பாட்டின் அல்லது தேற்றத்தின் கண்டுபிடிப்பாகும். ஆனால் அறிவியலாளர்களுக்கு அந்த புதிய கோட்பாடு எதுவென்பது ஆய்வைத் தொடங்குவதற்கு முன்பே தெரியாது. அதாவது ஆய்வை முன்முடிவோடு தொடங்கமாட்டார். ஆனால், காலண்டரின் ஆய்வு முடிவுகள் தலைகீழாக உள்ளது. இந்துத்துவவாதிகளுக்கு இதுவொன்றும் புதிதல்ல. ஆய்வு என்ற பெயரில் ஏற்கனவே பல திரிபு வேலைகளைச் செய்து அம்பலப்பட்டுப் போனவர்களே அவர்கள். 

அண்மைக்கால மரபியல் ஆய்வுகள் இந்து தீவிரவாதிகளுக்கு பெருத்த அடியைத் தந்துள்ளது. அதை அவர்களால் செரிக்கவே முடியவில்லை. தவிர இன்னும் இறுதி முடிவை எட்டாத நிலையிலும்,  ஐராவதம் மகாதேவன் போன்றவர்களின் மொழி ஆய்வு சிந்துவெளி நாகரிகத்தை தமிழ் மொழியோடு தொடர்புப்படுத்துவது வேரு தலைவலியை அதிகரிக்கிறது. இந்தப் பதட்டத்தின் ஒரு விளைவே காலண்டர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனாலும் பதட்டத்தில் பல இடங்களில் சான்றுகள் என்ற பெயரில் தமது கருத்தியலுக்குத் தாமே குழித் தோண்டிக் கொண்டுள்ளனர்.  சிந்துவெளி நாகரிகத்தை ஆரியமயமாக்கும் முயற்சியில் திராவிட நாகரிகத்துக்கு தந்துள்ள இடம் திராவிட நாகரிகம் என்கிற கருத்தை மேலும் வலிமையாக்கவே உதவுகிறது என்பதை அறியாமல் கோட்டை விட்டுள்ளனர். ஸ்குரோல் இதழ் குறிப்பிடுவது போல இது ‘இந்தி – இந்து –  இந்துத்துவா’ என்கிற பாஜகவின் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரானது என்பதை அவர்கள் உணரவில்லை. 

ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சான்றுகள் என்று 12 மாதத்துக்கும் 12 சான்றுகளை முன்வைக்கும் இந்தக் காலண்டரின் முதல் பக்கத்தில் ‘தொடக்கச் சான்றுகள்’ என்ற பெயரில் இந்தச் சான்றுகளுக்கான விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நான்கு மாதங்களுக்கான விளக்கம் காலனிய வரலாற்றாசிரியர்களால் தவிர்க்கப்பட்ட அடிப்படை புள்ளிகளை தொடக்கி வைப்பதாகக் கூறுகிறது. அடுத்த நான்கில் ஒரே மடிப்பிலுள்ள வேதக் கலாச்சாரத்துக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்குமான நான்கு சான்றுகளின் தீர்க்கமான தொகுப்பை முன்னிறுத்துவதாகக் கூறப்படுகிறது. கடைசி நான்கு மாதங்களில் காலனியாளர்கள் ஏன் அப்படியொரு கட்டுக்கதையை உருவாக்கினார்கள் என்ற காரணங்களையும், அவை எப்படி இன அடிப்படையிலான இரு உலகப் போர்களுக்கும் காரணமானது என்பதையும் விளக்குவதாகக் கூறப்படுகிறது.

இந்த சான்றுகளுக்கும் (?) காலண்டரில் இடம்பெற்றுள்ள படங்களுக்கும் ஒரு பொருத்தமும் இல்லாது கேலிக் கூத்தாக அமைந்துள்ளது இக்காலண்டர். இந்த லட்சணத்தில் இந்தச் சான்றுகள் மூழ்கியுள்ள பனிமலையின் நுனி மட்டுமே என்று பீற்றிக் கொள்வதுதான் சிறந்த நகைச்சுவை.

இத்தகைய திரிபு சான்றுகள் அவர்களுக்குப் புதிதல்ல. 1932-33வாக்கில் சிந்துவெளி அகழாய்வுகளின் அடிப்படையில் புதிய வரலாற்று உண்மைகள் கண்டறியப்பட்டதும்  அவர்களை ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது. அதுவரை மிகவும் தொன்மையானது எனக் கருதப்பட்ட வேதப் பண்பாட்டுக்கு அது ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்பது அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஆரிய மொழியினரின் வேதப் பண்பாட்டிற்கும் மத்திய ஆசியாவுக்கும் உள்ள தொடர்பிற்கும் மாறாக இப்புதிய பண்பாடு உள்ளூர் தன்மையுடன் இருந்தது அவர்களுக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது. இந்நிலையில் கால்டுவெல்லின் திராவிட மொழிக் குறித்த கருத்து சிந்துவெளி அகழ்வுகள் கண்டுபிடிப்புடன் இணைந்து இங்குத் திராவிடக் கருத்தியல் உருவாக வழிவகுத்துவிட்டது. இந்நிலையில்தான் குருஜி கோல்வால்கர், ‘நமக்கான வரலாற்றை நாமே எழுதிகொள்ள வேண்டும்’ என்றார். அன்று முதல் வரலாற்று திரிபு இந்துத்துவ பரிவாரங்களின் ஆயுதங்களில் ஒன்றாக விளங்குகிறது என்கிறார் அ.மார்க்ஸ்.

இதன் விளைவாக ரிக்வேதக் காலத்துக்கு முந்தைய தனித்துவமுடைய சிந்துவெளி நாகரிகம் என ஏதும் கிடையாது. சிந்துவெளி நாகரிகமே ரிக்வேதகால நாகரிகம்தான் இதனை சிந்து சரஸ்வதி நாகரிகம் என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதற்காகப் பல புதிய கண்டுப்பிடிப்புகள் திட்டத்தைத் தொடங்கினர். இதர்காகப் பணியாற்ற அதில்  எஸ்.கல்யாணராமன், ஸ்ரீகாந்த் தலகிரி, என்.எஸ்.ராஜாராம், டேவிட் ப்ராலி, மிஷேல் டானினோ முதலிய புதிய ஆராய்ச்சியாளர்கள் உருவாகினர். இதன் தொடர்ச்சியாகவே இந்த இன்ஸ்டிடியூட்டின் செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் இந்தியன் நாலெட்ஜ் சிஸ்டம்ஸின் தலைவரான பேராசிரியர் ஜெய் சென் என்பவரும் இணைந்துள்ளார்.

பிபிசி செய்தி நிறுவனத்துக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல கல்வி நிறுவனங்கள் இந்தக் காலண்டரின் ஒவ்வொரு பக்கம் தொடர்பாக தனித்தனி பட்டறைகளை ஏற்பாடு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளன” என்று குறித்துள்ளது. அவர் கூறியது உண்மையான செய்தி என்றால் இது கவலைக்கொள்ளத்தக்கது; தடுத்து நிறுத்தப்பட வேண்டியது. ஆனாலும் இதுபோன்ற அபத்தச் செய்திகளுக்கு அறிவுலகம் அனுமதிக்காது. முன்னர் உருவாக்கப்பட்ட இதுபோன்ற திரிபுகளை ஹார்வர்ட் பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசிரியர் மிஷேல் விட்ஸலும், இந்தியவியல் அறிஞர் ஸ்டீவ் ஃபார்மரும் முறியடித்தனர்.  

ஆனால் இம்முறை அத்தகைய அறிஞர்களின் நேரத்தை வீணடிக்காது நாமே எளிதில் முறியடிக்கும் வண்ணமே இந்த அபத்தங்கள் உள்ளன. உறுதியான சான்றுகளை முன்வைத்து இந்தத் திரிபுகளை அம்பலமாக்கும் வலிமையான கருத்தாயுதங்கள் தொடர்ந்து நமக்குத் தேவைப்படுகிறது. அதிகாரத்தின் ஆதரவும் இருக்கும் நிலையில் திரிபுவாதக் கருத்தியல்கள் பாசிசத்தை நோக்கி வெற்றி நடைப்போட முயல்கிறது. இந்த நடையை முடமாக்க வேண்டும். .

காலண்டரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு மாதத்துக்கான ஒவ்வொரு திரிபுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்த வேண்டும். விரைவில் செய்வேன்.