பறவை நோக்கலையும், பறவைகளைப் பார்க்க மேற்கொள்ளும் பயணங்களையும் துடிப்புமிக்க எழுத்தாக்குவதில் தியடோர் பாஸ்கரன், சு. முகமது அலி ஆகியோர் முன்னோடிகள் என்பதை அறிவோம். அவர்களின் அடிச்சுவட்டைப் பின்தொடர்கிறார் செழியன். ஜா.

இயற்கையியல் சார்ந்து எழுதவரும் பலரும் முன்னோடிகளைப் போலவே எழுத முனைவது சற்று புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனாலும், புதியவர்கள் தனக்கென ஒரு எழுதுமுறையைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலோர் தாம் பார்த்த காட்சியை விவரிப்பதில் காட்டும் ஆர்வத்தைத் தம் எழுதுமுறையில் காட்ட முனைவதில்லை. ஆனால் செழியனுக்கு எழுதுமுறை கை வந்திருக்கிறது என்பது ஆறுதல். .

‘பறவைகளுக்கு ஊரடங்கு’ என்கிற இந்நூலிலுள்ள கட்டுரை செழியனின் தனித்த எழுதுமுறைக்குச் சான்றாக இருக்கிறது. ஆனாலும், இவர் தன் பொருளடக்கத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. குறிப்பாக, இரண்டு நேர்வுகளை அடையாளம் காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, ‘சென்னை பறவை பந்தயம்’ என்கிற கட்டுரையில் போகிறப்போக்கில் சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தையும், அங்குக் கண்ட செண்டு வாத்தினைப் பற்றியும் சில வரிகளில் கடந்து செல்கிறார். ஆனால், அவை இரண்டுமே ஒரு தனிக் கட்டுரைக்கான பொருளடக்கத்தைக் கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறுகிறார் என்பது என் எண்ணம். என் கவனத்துக்கு வந்தவரை இவற்றைப் பற்றி இன்னும் எவரும் விரிவாகத் தமிழில் எழுதவில்லை என்பதால் அப்படிச் சொல்கிறேன். .

இதுபோல மற்றொரு கட்டுரையான, ‘சிட்டுக்குருவிகளைப் பின்தொடர்ந்து…’ என்பதில் பட்டினப்பாக்கம் ஆட்டோ டிரைவர் அஸீஸ் வீட்டில் பார்த்த சிட்டுக்குருவிகளைத் தொடர்ந்து திருவல்லிக்கேணியிலும் அவற்றைத் தேடிச் செல்கிறார். இவை இரண்டுமே முஸ்லீம் குடியிருப்புகளோடு தொடர்புடையது. முஸ்லீம்களின் வாழ்விடத்திலும் சிட்டுக்குருவிகள் உள்ளன என்பது ஒரு நோக்கத்தக்க செய்தி முஸ்லீம்கள் என்றாலே புலால் உண்ணுபவர்கள் அவர்களுக்குப் பெரிதாக உயிர்களிடத்து கருணையில்லை என்கிற பொதுபுத்தியை உடைக்கும் வாய்ப்பு இக்கட்டுரையில் இருக்கிறது. இதுகுறித்து ஒரு தனித்த கட்டுரை வருமானால் அது சிட்டுக்குருவிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயே ஒரு இனவரைவியல் கட்டுரையாகவும் அமைந்திருக்கும்.

ஒரு நல்ல எழுதுமுறையைக் கொண்டிருக்கும் செழியன் அடுத்தமுறை இதுபோன்ற செய்திகளில் இன்னும் நுணுக்கமாகக் கவனம் செலுத்தி தன் கட்டுரையை வரையவேண்டும். அது அவரை இயற்கையியல் எழுத்தாளர்களில் தனித்துவமான அடையாளத்தைத் தரும். அந்தத் திறமை செழியனுக்கு இருப்பதை அவருடைய எழுத்துக்கள் மெய்ப்பிக்கிறது.

தொடக்க நிலையில் பறவைகளைக் குறித்து, பறவை நோக்கலைப் பற்றி அறிய விரும்புபவர்கள் இந்நூலைப் படிக்கலாம். அது கட்டாயமாக உங்களைப் பறவைகளை நோக்கி ஈர்க்கும் என்பதில் அய்யமில்லை.

பறவைகளுக்கு ஊரடங்கு (சூழலியல்) செழியன்.ஜா. காக்கைக்கூடு வெளியீடு, விலை: 150, நூலை வாங்க – 90436 05144.