ஒரு குழந்தை கவிதை எழுதுகிறது என்றால் அதை ‘மழலை மேதை’ (Prodigy) என்பதற்காக அஞ்சுவதா? அல்லது வரவேற்பதா என்று ஒரு குழப்பம். ஆனால், குழந்தை மகிழ் ஆதனுக்கு அந்த குழப்பம் இல்லை. அவனுடைய உலகம் எளியது.
மழை ஒரு பூமி
ரவுண்டு பூமி
என்று அதைக் கடந்து போகிறான். அதனால்தான் நான்தான் உலகத்தை வரைந்தேன் என்று சொல்ல அவனால் முடிகிறது. ‘Rose is a rose is a rose is a rose.’ என்பது கவிதையென்றால்,
ரோஜாப் பூ
என்னை மோந்து பார்த்து
மோந்து பார்த்து
பார்த்தே விட்டது
என்பதும் கவிதைதான். ஏரணம் எல்லாம் யோசிக்க தேவையில்லை. ஆனால், இதற்கு நேர்மாறாக பின் அட்டையில் பா. வெங்கடேசனும், முன்னுரையில் மகிழ் ஆதனின் தந்தை ஆசையும் ‘தர்க்கம் – அதர்க்கம், தியானம்’ என்றெல்லாம் சொற்களை இட்டு நிரப்பி அச்சுறுத்துகிறார்கள். அது குழந்தைத்தனத்தின் இயல்புக்கு அந்நியமாகவும் உள்ளது.
நல்லவேளை, மகிழ் ஆதன் இந்த அறிவுத்தனத்தை எல்லாம் தன் சொந்த சொற்களால் கேலி செய்து (மிமிக்ரி – சனம், தேவதை – தேவகதை) கடந்துவிடுவது சற்று ஆறுதல்.
நான்தான் உலகத்தை வரைந்தேன் (சிறார் கவிதைகள்) மகிழ் ஆதன், வானம் பதிப்பகம், விலை: 50, நூலை வாங்க – 9176549991
Comments are closed.