இஸ்கானின், ‘அட்சய பாத்திரம்’ காலை உணவுத் திட்டம்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலை உணவு திட்டம் சர்ச்சைக்குரிய இந்துமத அமைப்பான, ‘ஹரே கிருஷ்ணா’ என்றழைக்கப்படும் ‘இஸ்கான்’ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் இஸ்கான் அமைப்போடு தொடர்பில் இருந்த காரணத்தால் இதுபற்றிய சில கருத்துகளை சொல்ல விரும்புகிறேன்.

இஸ்கான் அமைப்பு, உலகம் முழுதுமுள்ள தம் கிளைகளின் மூலம் ஏற்கனவே, ‘Food for Life’ என்ற திட்டத்தின் வழியாக இலவச உணவை விநியோகித்து வருகிறது. இந்திய ஒன்றியத்திலும் 12 மாநிலங்களின் பள்ளிகளில் ‘அட்சய பாத்திரம்’ என்ற திட்டம் செயல்பட்டு வருவதாக அதன் இணையத் தளம் கூறுகிறது. அது வழங்கும் உணவு, வெங்காயம் பூண்டுக்கூட கலவாத தீவிர மரக்கறி உணவு என்பதைக் குறிப்பிட தேவையில்லை. ஆனால் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக, ஏற்கனவே பள்ளிகளில் இலவச உணவுத் திட்டத்தைச் வெற்றிகரமாகச் செயலாற்றிவரும் தமிழ்நாட்டில், ஒரு தனியார் அமைப்பைக் கொண்டு காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்ற முனைவது இருமுனைகளில் அய்யத்தை தோற்றுவித்துள்ளது.

முதலாவது, இந்தத் தனியார் உணவு வழங்கும் திட்டம் எதிர்காலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, சத்துணவு ஊழியர்களின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்புகிறது. இரண்டாவது மாட்டிறைச்சி வடிவத்தில் முன்பு சர்ச்சையை எழுப்பிய உணவு அரசியல் தற்போது மென்வடிவத்தில் மாறுவேடமிட்டு வருவதாகும். ராஜ்பவனுக்குள் மரக்கறி உணவை மட்டுமே  அனுமதிக்கும் கவர்னர் இந்த அமைப்பு உணவு வழங்குவதற்கு ஆர்வத்துடன் 5 கோடி ரூபாய் நிதியை அனுமதித்த செய்கை அதை உறுதிப்படுத்துகிறது.

ஏற்கனவே கர்நாடகாவின் பள்ளிகளில் செயல்பட்டுவரும் அட்சய பாத்திரம் திட்டம் அம்மாநிலத்திலேயே சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில், எந்த நியாயத்தின் அடிப்படையில் அது இங்கு அனுமதிக்கப்பட்டது என்பது விளங்கவில்லை. ஏற்கனவே இலட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு மதிய சத்துணவுத் திட்டத்தை செயற்படுத்திவரும் அரசு, எவ்வகையில் காலை உணவை வழங்குவதற்கான தகுதியை இழந்துள்ளது?

இவை ஒருபுறமிருக்க அட்சய பாத்திரம் வழங்கும் உணவின் அடிப்படை அரசியல்தான் முதன்மை பேசுப்பொருள். இதன் சமையல் முறையில் வீகன் உணவு அரசியலின் இந்திய மாதிரியான வெங்காயம் பூண்டு ஆகியவற்றின் நீக்கம் இடம்பெறுகிறது.  இதுவொரு குறிப்பிட்டப் பிரிவினரின் மரக்கறி உணவு பண்பாடே ஒழிய பொதுவான மரக்கறி உணவுப் பண்பாடு அல்ல. தமிழ்மக்களின் மரக்கறி உணவு பண்பாட்டில் இவை நீக்கப்படுவது இல்லை. எனவே அனைத்து பிரிவு குழந்தைகளின் மீது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் உணவுப் பண்பாட்டு அரசியலைத் திணிப்பது ஒருவகை வன்முறையே.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் நீக்கத்தால் ஏற்படும் நுண்சத்துக்களின் இழப்பைப் பெருங்காயம் கொண்டு ஈடுசெய்யலாம் என்பது இஸ்கானின் சார்பில் கூறப்பட்டதை அறிவேன். இது எந்தளவுக்கு உண்மையாகும் என்பதை உணவு வல்லுநர்கள்தாம் விளக்க வேண்டும்.

இஸ்கானின் மற்றொரு தனித்துவப் பழக்கத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் உணவை தாம் உண்டாலும் சரி அல்லது பிறருக்கு வழங்கினாலும் சரி அவற்றை கிருஷ்ணருக்கு படைக்காமல் வழங்கமாட்டார்கள். இத்திட்டத்தின்படி உணவு ஓரிடத்தில் சமைக்கப்பட்டு அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என்பது தெரியவருகிறது. வழங்குவதற்கு முன்பாக கிருஷ்ணருக்கு உணவைப் படைக்கும் வழக்கத்தை அவர்கள் கைவிட வாய்ப்பே இல்லை. ஏனெனின் அவர்கள் வெறும் சாதத்தை விநியோகிக்க மாட்டார்கள்; ‘பிரசாதம்’ மட்டுமே விநியோகிப்பதே உலகெங்கும் பின்பற்றும் வழக்கம். ஏனெனில் பிரசாதம் மட்டுமே ஒரு மனிதரை அவருடைய கர்மாவில் இருந்து விடுவிக்கும் என்பது அவர்களது அடிப்படை நம்பிக்கை.

உணவு, கர்ம விடுதலை அளிக்கும் என்பது சனாதனத்தின் கோட்பாடு. ஏனெனில் மனிதர்களை மூன்று குணங்களின் அடிப்படையில் வகுத்து வைத்திருக்கிறது சனாதனம். சத்வ, ரஜோ, தாம்ஸ என்பதே அந்த மூவகைக் குணங்கள். நால்வகை வர்ணங்களும் இந்த குணத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதையே பகவத்கீதையில், ‘சதுர்வர்ணம் சிருஷ்டா மயம்’ எனக்கூறும் கிருஷ்ணர் அதன் அடிப்படையை விளக்குகையில், ‘குணகர்ம விபாகச’ என்பார். இதன்படி மனித பிரிவுகள்  கீழ்கண்ட குணங்களின் அடிப்படையில் வகை பிரிக்கப்பட்டுள்ளனர்.  

தாமஸக் குணம் – சூத்திரர்கள், வைசியர்கள்

ரஜோ குணம் – சத்ரியர்கள்

சத்வ குணம் – பார்ப்பனர்கள்  

இதன்படி பார்ப்பனர்கள் ஏற்கனவே சத்வ குணத்தில் நிறைந்துள்ளனர். மற்றவர்கள் தங்களது கர்மாவில் இருந்து விடுபட சத்வ குணத்தை நோக்கி தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கு வெங்காயம், பூண்டு தவிர்த்த மரக்கறி உணவைப் பழக வேண்டும். இப்படியான சத்வகுணத்தை உருவாக்கும் பிரசாத உணவை வழங்குவதே இஸ்கானின் நோக்கம்.

நான் பக்தி மயக்கத்தில் இருந்து மீண்டு, படிப்படியாக அறிவுப் பாதைக்கு திரும்ப தொடங்கிய நேரத்தில் இஸ்கானில் ஒரு கேள்வியை எழுப்பினேன்.

“மரக்கறி உணவு உண்மையிலேயே சத்வ குணத்தை வழங்குமா?”

“ஆம்”

“அன்பே உருவான மதர் தெரசா மரக்கறி உணவு உண்பவரா?”

“………………”

“உலகிலேயே கொடுங்கோலராக விளங்கிய ஹிட்லர் ஒரு மரக்கறி உணவாளர்தானே? அவரிடம் ஏன் சத்வ குணம் நிலைப்பெறவில்லை?”

பதில் கிடைக்கவில்லை. மாறாக நான் மாயையின் வசப்பட்டுவிட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டேன். இறைமையைவிட வலிமை வாய்ந்த அந்த மாயைக்கு நன்றி.

நான் அப்போது மற்றொரு கேள்வியையும் கேட்க நினைத்தேன். அன்று அதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அதை தற்போது கேட்பதற்கு தடையில்லை என்று நினைக்கிறேன். கேள்வி இதுதான்:

“நாதுராம் விநாயக கோட்சே, சத்வ குணம் நிறைந்த ஒரு மரக்கறி உணவாளர் என்பது ஏன் அவருடைய துப்பாக்கிக்கு தெரியவில்லை?